மும்பை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் திடுக்.. 11 லட்சம் இரட்டை வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!

Su.tha Arivalagan
Nov 24, 2025,03:33 PM IST

மும்பை: மும்பையில் வரவிருக்கும் மாநகராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக, மும்பை மாநகராட்சி (BMC) வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டை வாக்காளர் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. 


இதுதொடர்பாக ஏற்கனவே சிவசேனா (UBT), மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (MNS) மற்றும் மகா விகாஸ் அகாடி (MVA) போன்ற எதிர்கட்சிகள் புகார் கூறி வந்தன. 




மும்பையில் மொத்தம் 1 கோடியே 3 லட்சத்து 44 ஆயிரத்து 315 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5,516,707 ஆண்கள் மற்றும் 4,826,509 பெண்கள் அடங்குவர். இந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கையில், 11 லட்சத்திற்கும் அதிகமான இரட்டை பதிவுகள் இருப்பது, வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 


இந்த இரட்டை வாக்காளர் பதிவுகள் மும்பையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. மேற்கு புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்சமாக 4,98,597 இரட்டை பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 3,29,216 பதிவுகளும், தீவு நகரப் பகுதியில் 2,73,692 பதிவுகளும் உள்ளன. 


போரிவலி பகுதியை உள்ளடக்கிய R (மத்திய) வார்டில், வார்டு எண் 15 இல் 61,361 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்தேரி மேற்கு, ஜோகேஸ்வரி மேற்கு மற்றும் வில்லே பார்லே மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய K (மேற்கு) வார்டில், வார்டு எண் 66 இல் 61,518 வாக்காளர்கள் உள்ளனர். N வார்டில் (காட்கோபர்), வார்டு எண் 131 இல் 62,014 வாக்காளர்கள் உள்ளனர். L வார்டில், வார்டு எண் 164 இல் 60,094 வாக்காளர்கள் உள்ளனர். நகரத்தில் உள்ள மற்ற அனைத்து வார்டுகளிலும் தலா 60,000 க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர்.