மஸ்கட்டில் கோலாகலமான 11-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி மற்றும் முக்குலத்தோர் முப்பெரும் விழா!

Su.tha Arivalagan
Nov 04, 2026,05:14 PM IST
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இயங்கி வரும் மஸ்கட் முக்குலத்தோர் அமைப்பு, கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து பசும்பொன் உத்தமசீலரின் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.

அதுமட்டுமின்றி, தமிழர்களின் கலை-பண்பாட்டு அடையாளங்களைப் போற்றும் வகையில் பல்வேறு வகையான விழாக்களை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.



தமிழ் புத்தாண்டு விழா, தியாகச் செம்மல்கள் மருதுபாண்டிய சகோதரர்களின் குருபூஜை விழா, மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா என அனைத்துத் தேசிய மற்றும் பண்பாட்டு விழாக்களையும் ஆண்டுதோறும் மிக எழுச்சியுடனும் விமரிசையாகவும் கொண்டாடி வருகிறது.

அந்த வகையில், இவ்வமைப்பின் சார்பில் 11-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழா மற்றும் முக்குலத்தோர் முப்பெரும் விழா - 2026 அண்மையில் மிக விமரிசையாகவும், பாரம்பரிய உணர்வுடனும் நடைபெற்றது.



தாயகத்தைப் பிரிந்து வாழும் முக்குலத்துச் சொந்தங்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும், தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில், ஓமனின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.



விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவ திருமகனாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, தாய்மண்ணின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், இசை மற்றும் சிறார்களின் கலைப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டன.

ஒரே குடும்ப உணர்வோடு அனைவரும் ஒன்றிணைந்த இந்நிகழ்வு, மஸ்கட் வாழ் தமிழர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.



நிகழ்ச்சியின் நிறைவில், விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அமைப்பாளர்கள், நன்கொடையாளர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சான்றோர்கள் மற்றும் வருகை தந்த உறவுகள் அனைவருக்கும் மஸ்கட் முக்குலத்தோர் அமைப்பின் நிர்வாகிகள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

மஸ்கட் வாழ் முக்குலத்துச் சொந்தங்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இவ்விழா இனிதே நிறைவுற்றது.