12 வயதில் 2 புத்தகங்கள்.. குவியும் பாராட்டுகள்.. அசத்தும் எழுத்துலக இளவரசி ப்ரீத்தா!
சென்னை: ஜஸ்ட் 12 வயதுதான் ஆகிறது ப்ரீத்தா பவானிக்கு. இந்த இளம் வயதிலேயே 2 புத்தகங்களை எழுதி அசத்தியுள்ளார், எழுத்தலக இளவரசியாக வலம் வரும் ப்ரீத்தா.
அவர் எழுதிய ஒரு கதையின் பெயர் "தி யுனைடெட் யுனிவர்ஸ்" (The United Universe). இது அறிவியல் புனைகதை (Science Fiction) ஆகும். அமைதி, இயற்கையுடன் ஒன்றிவாழ்தல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவை ஆகியவை பற்றி இந்தக் கதை பேசுகிறது. அடுத்த கதை, "டச்சஸ் அண்ட் டேகர்ட்" (Duchess and Dagger): இது ஒரு குற்றப்புனைவு (Crime Thriller). இதில் வரும் கதாநாயகி துப்பறிவாளராக (Detective) இருந்து, ஒரு பிரபலமான வரலாற்றாசிரியரின் கொலை மர்மத்தை வெளிப்படுத்துகிறார்.
ப்ரீத்தா தனது பேச்சாற்றலுக்காகவும், இரண்டு புத்தகங்களின் இளம் ஆசிரியராக அவர் பெற்ற சாதனைக்காகவும், வி.ஐ.டி. கல்லூரித் தலைவர் விஸ்வநாதனிடமிருந்து "எழுதுலக இளவரசி" என்ற விருதைப் பெற்றார்.
இது மட்டுமல்ல, ப்ரீத்தா 11 வயதில், 3 நாட்களில் 52 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
ப்ரீத்தா படைத்துள்ள கலை மற்றும் சாதனைகள் (Art and Achievements) ஆகியவற்றை பெரிய பட்டியலே போடலாம். ப்ரீத்தா ஒரு பாரம்பரிய பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். தனது நடனத் திறமைகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். சென்னை நாரத கான சபா மற்றும் ஆர்.ஆர். சபா உள்ளிட்ட முக்கிய மேடைகளில் நடனமாடியுள்ளார். தனது 9 வயதில், இவர் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டார். அதில் குந்தவை, பூங்குழலி, ஆண்டாள் மற்றும் குற்றாலக் குறவஞ்சியில் வரும் குறத்தி ஆகிய கதாபாத்திரங்களைச் சித்தரித்துள்ளார்.
ஒன்பது முறை 'ஸ்பெல் பீ' (Spell Bee) விருதுகளை தனது 9 வயதிலேயே வென்றுள்ளார். ப்ரீத்தா, தற்போது 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொடர் நாவல் (Novel Series) எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இளம் வயதிலேயே எழுத்துத் துறையில் அசத்தி வரும் ப்ரீத்தாவை நீங்களும் பாராட்டலாமே!