ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!

Meenakshi
Jul 17, 2025,05:37 PM IST

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள முக்கிய கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகுளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன் என்று தெரிவித்து வருகிறார்.


மேலும், இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், நாங்கள் ஆரம்பம் முதலே அனைவருக்கும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். இப்போது, ஆகஸ்ட் 1 முதல், அதாவது ஜூலை மாதத்திற்கான மின்சார கட்டணத்திலிருந்து, அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தும்  125 யூனிட் வரை மின்சாரத்திற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.  




அடுத்த மூன்று ஆண்டுகளில், வீடுகளின் கூரைகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு, சூரிய மின் அமைப்பை நிறுவுவதற்கான முழு செலவையும் 'குடீர் ஜோதி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கமே ஏற்கும். நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் அரசு மானிம் வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மாநிலம் 10,000 மெகாவாட் வரை சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.