TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!

Su.tha Arivalagan
Jul 12, 2025,10:07 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான தேர்வுகள் இன்று (ஜூலை 12, 2025) காலை தமிழகம் முழுவதும் 4922 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பே மையங்களுக்கு வந்து சேர வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.


காலை 9 மணிக்குத் தேர்வு தொடங்கிய தேர்வை கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் மொத்தப் பணியிடங்கள் 3935 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.




தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படைகள், தேர்வு மையங்களுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்குத் தடை, தேர்வு அறைக்குள் தேர்வர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தேர்வு மையங்களுக்கு வரும் தேர்வர்களின் நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவை தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டனர். .


தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.