கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து.. 3 தமிழ்நாட்டவர் உள்பட 14 பேர் பலி!

Manjula Devi
Apr 30, 2025,10:23 AM IST

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள  ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொல்கத்தாவின் மையப் பகுதியில் ரிதுராஜ் ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு 8.15 மணி அளவில் திடீரென தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து போராடினர்.




இந்த பயங்கர தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். இதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் தீக்காயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த தீ விபத்து தொடர்பாக கொல்கத்தா காவல் நிலைய ஆணையர் மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த தீ விபத்து இரவு 8:15 மணியளவில் ரிதுராஜ் ஓட்டல் வளாகத்தில் நடந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிர படுத்தப்பட்டு 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பலர்  காயமடைந்தனர் .


தீயணைப்புத் துறையின் கடும் முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது.  மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்ய ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். 


மேலும் இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அவர்கள் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (61), அவரது பேத்தி தியா ( 10), பேரன் ரிதன்  என மூவர் உயிரிழந்துள்ளனர்.