கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
Jan 29, 2026,11:20 AM IST
பொகோடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் எல்லைப் பகுதியில், 15 பேரை ஏற்றிச் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலம்பியாவின் சடேனா என்ற அரசு விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் 1900 என்ற இரட்டை எஞ்சின் கொண்ட விமானம், நேற்று காலை எல்லை நகரான குகுட்டாவிலிருந்து ஒகானா என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டது. இதில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர்.
தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, மதியம் 12 மணியளவில் இந்த விமானம் ரேடார் திரையில் இருந்து திடீரென மறைந்தது. விமானம் மாயமான பகுதி அடர்ந்த காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதி என்பதால், தேடுதல் பணிகளில் கடும் சவால்கள் நிலவின.
யமான இந்த விமானத்தில் கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த வேட்பாளர் கார்லோஸ் சால்சிடோ ஆகியோரும் இருந்தனர். தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவருமே பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து நிகழ்ந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்பகுதி கிளர்ச்சிக் குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். இதனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து கொலம்பிய விமான போக்குவரத்துத் துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.