பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய.. 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தல்..!

Manjula Devi
May 16, 2025,05:46 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 1867 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒன்பது லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 93.80 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீத பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அரசு பள்ளிகள் சாதனை:




இந்த நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் என தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 4917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1867 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


சென்னை மாநகராட்சி பள்ளிகள் அசத்தல்: 





10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் சென்னை 90.73% விகிதத்துடன் 34ம் இடத்தில் உள்ளது.  சைதாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 


குறிப்பாக, புரசைவாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 14 மாநகராட்சி பள்ளிகள் 100% பெற்று அசத்தியுள்ளனர். மேலும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கண்ட நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இதில் அடங்கும் என்பது நினைவிருக்கலாம்.


கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 79 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஏழு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


100% தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள்:



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 97.0 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  


குறிப்பாக மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 56 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.