2030 காமன்வெல்த் போட்டி.. அகமதாபாத்தில் நடத்த இந்தியா திட்டம்.. ஒப்புதல் அளித்தது IOA
டெல்லி: 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் விண்ணப்பத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கான முதன்மை நகரமாக அகமதாபாத் முன்மொழியப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் உயர் மட்டக் குழு, அகமதாபாத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போகும் நகரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, நவம்பர் 2025-ல் இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அறிவிக்கப்படும்.
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் இந்த முயற்சி, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்தும் அதன் பெரிய லட்சியத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டிகள் புதிதல்ல. கடந்த 2010ம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, புது டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளது. தற்போது பாஜக ஆட்சியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதேபோல ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.