அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55%ல் இருந்து 58% ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Meenakshi
Nov 13, 2025,02:34 PM IST

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதையடுத்து, தற்போது தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இது அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள். 




அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.


இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.