காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்

Meenakshi
Jan 20, 2026,05:14 PM IST

சென்னை : காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அக்கட்சியை சேர்ந்த 30 உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது, எந்தெந்த தொகுதிகளை பெறுவது, திமுக தலைமையிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கலாமா வேண்டாமா என்பது தொடர்பான பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த செயற்குழு கூட்டப்பட்டிருந்தது. 




இந்த  கூட்டத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 91 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில் 30 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரும் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களால் காங்கிரஸ் பிளவுபட்டு கிடப்பது அம்பலமாகி உள்ளது.


இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் யாருடைய கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு எத்தனை தொகுதிகள், கூட்டணியில் தொடர காங்கிரஸ் திமுக தலைமையிடம் ஏதாவது நிபந்தனை வைக்குமா, அப்படி வைத்தால் என்னென்ன நிபந்தனைகள் வைக்கும் என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.