குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

Su.tha Arivalagan
Jun 09, 2026,10:30 AM IST

ரியோ டி ஜெனிரோ: குழந்தையைப் போல நடித்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றிப் பொய் கூறி, அமண்டா மரியா சௌசா டி ஒலிவேரா என்ற 37 வயது பெண், ஒரு வருடத்திற்கும் மேலாகத் தன்னார்வலர்களையும் தன்னை வளர்த்த குடும்பத்தினரையும் ஏமாற்றியுள்ளார். 


இறுதியில், இணையதளத் தேடல் ஒன்றின் மூலம் அவர் நாடு முழுவதும் நடத்தி வந்த ஒரு பெரிய மோசடி நெட்வொர்க் அம்பலமாகியுள்ளது.


அமண்டா குழந்தையைப் போன்ற குரலில் பேசி, போலிப் பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். தனக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும், கடந்த காலத்தில் பல கொடுமைகளை அனுபவித்து அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் கூறி தேவாலயங்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் சில குடும்பங்களின் அனுதாபத்தைப் பெற்று, அவர்களிடம் இருந்து பண உதவி பெற்றுள்ளார்.




பிரேசிலில் உள்ள ஒரு தம்பதியினர் இவரை உண்மையான குழந்தை என நம்பி, 14 மாதங்களாகத் தங்கள் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தனர். அவர் மீது மிகுந்த பாசம் கொண்ட அத்தம்பதியினர், அவரை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கவும் முன்வந்தனர்.


தத்தெடுப்பது குறித்த பேச்சுக்கள் வரும்போதெல்லாம் அமண்டா அதைத் தவிர்த்து வந்துள்ளார். மேலும், அவரிடம் எந்தவொரு அடையாள அட்டையும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர், இணையத்தில் அவரைப் பற்றித் தேடியபோதுதான், அவர் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் இது போன்ற பல மோசடிகளைச் செய்திருப்பது தெரியவந்தது.


மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரின் உண்மையான வயது 37 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரிடம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, அவருக்கு மனநலப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.