100 அடி இல்லங்க... 40 அடி உயர கொடி கம்பம்... கொடி ஏற்றுகிறார் தவெக விஜய்!
மதுரை: மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் திடலில் 40 அடி உயர புதிய கொடி கம்பத்தில், தவெக தலைவர் விஜய் கொடியேற்றுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த மாநாட்டின் பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டமிட்டிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நெடுஞ்சாலையின் இருபுறமும் சாரை சாரையாக அணிவகுத்து செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியை காண 50க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் பெருத்தப்பட்டுள்ளன.
எலியார்பட்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தவெக மாநாடு நடக்கும் இடத்தில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எலியார்பட்டி சுங்கச்சாவடியில் இருந்தே வாகனங்கள் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டின் போது அக்கட்சி தலைவர் விஜய் 100அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதே போன்று 100 கொடி கம்பம் நேற்று நடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டன. கிரேன் மூலம் கம்பம் அமைக்கும் பணி நேற்று நடந்த போது திடீரென அது சரிந்து விழுந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் மீது விழுந்தது. அந்தக் கார் முழுமையாக சிதறியது. இதனால் அங்கு மாநாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சிதறி ஓடினர். அதிர்ஷ்ட வசமாக காருக்குள்ளும், அதற்கு அருகிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கொடியை ஏற்றுவாரா? ஏற்றமாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து அவசர அவசரமாக கொடி கம்பம் நடும் பணி நடைபெற்று வருகிறது. 100 அடி உயர கொடி கம்பத்திற்கு பதிலாக 40 அடி உயர கம்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் தான் தவெக தலைவர் விஜய் கொடி ஏற்ற உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.