எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள்.. 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றம்!
சென்னை: சென்னை எழும்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக 5 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும், வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்-மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ்
இந்த ஐந்து ரயில்களும் ஜூன் 18ம் தேதி முதல் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18ம் தேதி வரை தாம்பரத்திலிருந்தே இந்த ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல தாம்பரம்- ஹைதராபாத் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இன்று முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் மாற்றம் காரணமாக, பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி - செங்கல்பட்டு, அரக்கோணம் - சென்னை கடற்கரை உள்ளிட்ட 7 மின்சார ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல மேற்கண்ட காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.