5 தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ரெடி.. நெருக்கடியில் தமிழக அரசியல் கட்சிகள்

Su.tha Arivalagan
Nov 04, 2026,01:28 PM IST

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 


ஆனால் தமிழகத்தில் எஸ்எஸ்ஆர் பணிகள் நடைபெற உள்ளது, ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு, தேர்தல் வழக்குகள் போன்ற காரணங்களால் 5 தொகுதி இடைத்தேர்தல் இன்னும் 6 மாதங்கள் வரை தள்ளிப் போகலாம் என தேர்தல் கமிஷன் கூறி இருந்தது.


ஆனால் தேர்தல் ஆணைய விதிகளின் படி ஒரு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி, புதிய எம்எல்ஏ பொறுப்பேற்க வேண்டும். அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் டிசம்பர் மாதத்துடன், தமிழகத்தில் 5 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைகிறது. இதனால் டிசம்பர் 20ம் தேதிக்கு முன் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




ஆனால் தேர்தலை எதிர்கொள்வதில் தமிழகத்தில் ஆளும் கட்சியான தவெக முதல் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் வரை பலருக்கும் பல பிரச்சனைகள் உள்ளது. நெருக்கடியான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் இருக்கும் சமயத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்களை இப்போது அலசிப் பார்ப்போம்.


தவெக :


தவெக அரசு பொறுப்பேற்று நவம்பர் மாதத்துடன் 6 மாதங்கள் நிறைவடைவதால், நவம்பர் 12ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடப்பதாக தொடர்ந்து தவெக புகார் கூறியும் வருகிறது. இன்று கூட புதுப் புகார் ஒன்றை மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கூறியுள்ளார்.


தற்போதைய சூழலில், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தவெக.,விற்கு எதிரான ஒரு விதமான அதிருப்தி மனநிலையில்தான் உள்ளன. ஏற்கனவே சிறுபான்மை அரசாக இருக்கும் தவெக அரசு, மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற முடியாது. 


இது ஒருபுறம் இருக்க, திருச்சி கிழக்கு தவிர மற்ற தொகுதிகளில் ஏற்கனவே ராஜினாமா செய்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த தவெக திட்டமிட்டுள்ளது. அப்படி பார்த்தால் விராலிமலை தொகுதி வேட்பாளராக தவெக முடிவு செய்து வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு சம்மன் அனுப்பி உள்ளது. 


5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில் இருக்கும் தவெக.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான வலுவான பிரச்சாரங்களை முன் வைக்க காத்திருக்கின்றன. மின்சாரம், சட்ட ஒழுங்கு, சிறைகளில் கைதிகள் தப்பியோடியது என பல சவால்கள் தவெக.,வுக்கு காத்திருக்கிறது.


திமுக : 


திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது திமுக எம்.பி., கனிமொழி போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது. இதனால் திருச்சி கிழக்கில் திமுக.,வின் வெற்றி இப்போதே உறுதியாகி விட்டது என அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். 


ஆனால் அந்த தொகுதியின் முக்கிய நிர்வாகிகளான திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு லஞ்ச வழக்கில் எந்த நேரத்திலும்  கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. அன்பில் மகேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். 


இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக.,விற்காக வேலை செய்ய ஆளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. மற்ற தொகுதிகளிலும் நிலவும் உட்கட்சி நிர்வாகிகள் இடையேயான மோதல் காரணமாக பல குழப்பமான சூழல்கள் உள்ளன.


அதிமுக :


சட்டசபை தேர்தலில் அதிமுக கைப்பற்றிய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை தவெக தன்வசம் ஆக்கிக் கொண்டுள்ளதுடன், அதிமுக இந்த தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ளதாக சொல்லப்படும் 5 தொகுதி இடைத்தேர்தல்களில் திருச்சி கிழக்கு தவிர மற்ற நான்கும் அதிமுக வென்ற தொகுதிகள்.


இவற்றில் குறைந்தது ஒரு தொகுதியையாவது அதிமுக மீண்டும் வென்றாக வேண்டும். அதைக் கூட பெற முடியவில்லை என்றால் அது அதிமுகவின் செல்வாக்கை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு சென்று விடும்.  எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கும் சிக்கல் அதிகரிக்கும்.

 

இதனால் இழந்த கட்சியின் செல்வாக்கை மீட்கவும், கட்சியில் இருந்து மேலும் யாரும் விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் அதிமுக உள்ளது. 


நாம் தமிழர் கட்சி : 


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார். திமுக, அதிமுக ஆதரவுடன் இவர் பொது வேட்பாளராக நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுக்கிறது. 


ஆனால் சீமானை பொது வேட்பாளராக அறிவித்து, திமுக-அதிமுக இணைந்து செயல்பட்டால் அது அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும். அதோடு தவெக.,வின் வெற்றி எளிதாகி விடும். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் முடிவுக்கும் இது பிள்ளையார் சுழி போட்டதாக மாறி விடும்.


அதை விட முக்கியமாக, சீமானுக்கு ஆதரவு அளித்து, அவரை வெற்றி பெற வைத்து, சட்டசபைக்கு அனுப்புவதால் திமுக.,விற்கோ, அதிமுக.,விற்கோ எந்த பலனும் கிடைக்க போவதில்லை. சீமானும் கூட திடீரென திமுக , ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் அவரது கட்சியினரே அவரை கைவிட்டு விடுவார்கள் அல்லது மக்களிடமிருந்து மேலும் அந்நியப்படும் அபாயமும் உள்ளது.


இதனால் தனித்து போட்டியிட வேண்டிய சூழலில் இருக்கும் சீமான், எப்படி திமுக, அதிமுக, தவெக.,வின் போட்டியை சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இப்படி ஒவ்வொரு கட்சியும் ஆளுக்கு ஒரு கவலையில் இருக்கும் நிலையில் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு கட்சி மட்டும் ஜாலியாக இருக்கிறது.. அது எந்தக் கட்சி என்று கமெண்ட்டில் சொல்லிட்டுப் போங்க.!