55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!

Meenakshi
Jun 23, 2025,05:45 PM IST

சென்னை: 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக மாற்றப்பட்டுள்ளார். முதன்மைச் செயலாளரான அவர் தற்போது சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளராகவும், சென்னை நதிகள் புணரமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 




வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பேரூராட்சிகள் இயக்குனராக மாற்றப்பட்டார். திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மாற்றப்பட்டு, திருச்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். உயர்கல்வித்துறை செயலாளராக  சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 


கூடுதல் தலைமை செயலாளர் விஜயகுமார் நிலச் சீர்த்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத் துறை அரசு செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


திருச்சி மாவட்ட ஆட்சியராக வெ.சரவணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக சினேகா, மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சுபபுத்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராக கந்தசாமி, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக கோ.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி ஆணையராக எஸ்.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக அமித், நெல்லை மாநகராட்சி ஆணையராக மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல தூத்துக்குடி, ஆவடி மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டனர். 


மதுரை கலெக்டர் சங்கீதா இடமாற்றம்




மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சமூகநலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.  நீண்ட காலம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய இடமாற்றத்தின்போது 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுளனர்.