வசுமிதா கொடுத்த விளக்கம்.. (அஞ்சாப்பு அட்டகாசங்கள் - 2)

Su.tha Arivalagan
Jun 01, 2026,01:49 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பயங்கர சுட்டி ..வாலுப் பசங்க...


கண்ணை விட்டு அகலாமல் கட்டுக்குள் வைத்திருப்பேன்... 


ஆனால் நான் விடுப்பு எடுக்கும் நாள்களில் அவர்கள் வேலையைக் காட்டி விடுவார்கள்..


விடுப்பு முடிந்து நான் வந்தவுடன் ஏகப்பட்ட பஞ்சாயத்து வரும்...


காலையில வந்ததும் பத்து பஞ்சாயத்து வந்தா... நான் பஞ்சாயத்து தீர்ககுறதா..பாடம் நடத்துறதா...என்று புலம்பிக் கொண்டே இருப்பேன்...


மாணவிகள்...மிஸ் நாங்க எல்லாம் அமைதியா தான் இருந்தோம் மிஸ்..பாய்ஸ் தான் மிஸ் சேட்டை பண்ணுனாங்க என்பார்கள்...


ஒரு சில மாணவிகள் மிஸ் பாவம்டா... உங்களால தான் டா நம்ம கிளாஸ் க்கு கெட்ட பெயர் என்பார்கள்...

மாணவர்களில் சிலர் ஸாரி மிஸ் என்பார்கள்...




வசுமிதா என்ற மாணவி மட்டும்...தயங்கி தயங்கி என்னிடம் ஏதோ கூற வந்தாள்...


அவள் அனைத்திலும் சற்றே வித்தியாசமானவள்..... மிஸ் என்று மற்ற மாணவர்கள் என்னை அழைப்பார்கள்...

அவள் மட்டும் டீச்சர் என்றே கூப்பிடுவாள்...


டீச்சர் நான் ஒன்னு சொல்லவா...சொன்னா திட்ட மாட்டீங்களே..என்றாள்...


சொல்லு வசு என்றேன்..


என்ன தான் சொல்வாளோ...என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே உற்றுப் பார்த்தேன்..


சொன்னாலே பார்க்கலாம்... டீச்சர்,நம்ம கிளாஸ் ல...ஏன் தெரியுமா பஞ்சாயத்து அதிகமா வருது..நம்ம ஸ்கூல் பேரு பஞ்சாயத்து யூனியன் மிடில் ஸ்கூல்... ஸ்கூல் பேருலயே பஞ்சாயத்து இருக்கு டீச்சர்...அதனால தான் டீச்சர் பஞ்சாயத்து வருது என்று போட்டாலே ஒரு போடு...


யாருடா நீங்க..எனக்குனு எங்க இருந்துடா கிளம்பி வந்தீங்க... இப்போ.. நான் சிரிக்கிறதா..அழுகிறதா..


மனதிற்குள் ஒரு சின்ன ரீவைண்ட்..


நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எதிரும் புதிரும் என்ற சொல்லுக்கு வாக்கியத்தில் அமைக்க சொன்ன தமிழ் ஐயாவிடம்..


தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் செந்திலும் எதிரும் புதிருமாக நடிப்பார்கள் என்று நான் கூறிய காட்சி மனக்கண்ணில் வந்து போனது...


முற்பகல் செய்யின்.. பிற்பகல் விளையும்...


நான் வேறு வழியில்லாமல் வசுமிதாவின் அந்தக் காமெடிக்கு சிரித்து வைத்தேன்..


வசுமிதா .... கலைத் திருவிழாவில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி.... எனக்கும் என் வகுப்பிற்கும் என் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவி


(அட்டகாசம் தொடரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).