Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

Su.tha Arivalagan
Jun 14, 2025,06:21 PM IST
துபாய்: துபாய் மெரினா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் பாதுகாப்பு குழுவினர் 6 மணி நேரம் போராடி  அணைத்தனர். வெள்ளிக்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட்டனர். தீயணைப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளன. கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துபாய் மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். அவசர உதவி குழுக்கள், குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.



குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. அவசர குழுவினர் விரைவாகவும், கவனமாகவும் செயல்பட்டு உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்தனர்.

அருகிலுள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், "சுமார் 1:30 மணிக்கு தீ கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருந்தது. நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. சிவில் பாதுகாப்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது இந்தத் தீ விபத்து.