தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நினைவஞ்சலி செலுத்த உள்ளதால், அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எக்ஸ் தள பக்கத்தில், இது குறித்த பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!
அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.
அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
'இரட்டைக் குவளை எதிர்ப்பு மாநாடு'நடத்தியது முதல் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமத்துவ சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லோரும் சமம் என்ற சமூகத்தை உருவாக்க நினைத்த தலைவர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் போற்றுகிறேன்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
ஒடுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெறவும், ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவும் போராடிய ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.
ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்கள் விரும்பிய ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்கவும், இன்று உறுதி ஏற்போம்.
நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான்
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப்போராடிய பெருந்தமிழர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகை!
சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளர்!
நம்முடைய தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்போம்!
சமூகநீதிப் போராளி தாத்தா இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சமூக விடுதலைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் தமது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடிய அவர், அதே நேரத்தில் சமூகங்களுக்குள் இணக்கம் வேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்து வந்தார். அதனால் தான் அவர் அனைத்து மக்களுக்குமான தலைவராக உயர்ந்தார்.
தமிழ்நாட்டின் சமூக விடுதலை வரலாற்றை இமானுவேல் சேகரனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. அவரது வாழ்க்கையே போராட்ட வரலாறு தான். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தில் 09.10.1924ஆம் நாள் பிறந்த இமானுவேல் சேகரனார், அவரது பதின் வயதிலேயே நாட்டு விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1942 ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் தனது 18வது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறைக்கு சென்றதால், பள்ளியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது.
ஆனாலும், நாட்டைக் காப்பதற்காக இந்திய போர்ப்படையில் இணைந்த அவர், தேச விடுதலையை உறுதிப்படுத்திய பின்னர் சமூக விடுதலைக்காக போராடத் தொடங்கினார். எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உருவெடுத்த அவர், 1957-ஆம் ஆண்டில் தமது 33-ஆம் வயதிலேயே கொல்லப்பட்டார். அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் கூட, அவரது சமூக விடுதலை இலக்குகளை எட்டியிருந்திருப்பார்.
இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரது விடுதலை உணர்வையும், தியாகத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர் எந்த இலக்கை அடைய பாடுபட்டாரோ, அந்த இலக்கை அடைவதற்காக உழைக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி தினரகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.