77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா உற்சாகத்துடன் நடைபெற்றது.
காலை சரியாக 8:00 மணிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் வானிலிருந்து மலர்களைத் தூவி மரியாதை செய்தது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
முன்னதாக, விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர், முப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை ஆளுநருக்கு முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ராணுவப் பிரிவு, கடற்படை, விமானப்படை மற்றும் தமிழக காவல்துறையின் பல்வேறு பிரிவினர் மிடுக்கான அணிவகுப்பை நடத்தினர். இதில் ராணுவ டாங்கிகள் மற்றும் நவீன போர்க்கருவிகளின் மாதிரிகள் பொதுமக்களின் பார்வைக்காக அணிவகுத்து வந்தன.
விழாவின் ஒரு பகுதியாக, வீர தீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கினார்.
அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்டவை இன்று வழங்கப்பட்டது.
விழாவில், "தமிழே வாழ்க, தாயே வாழ்க" என்ற கருப்பொருளை மையமாக வைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
விழாவையொட்டி மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலைப் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 7,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழக அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.