திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு வழக்கம் போல உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவர்களின் நடைமேடையில் அமர்ந்து மாணவர்கள் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீர் என பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் மோகித் மீது விழுந்தது. சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு மாணவனின் உறவினர்கள், பெற்றோர் விரைந்தனர். பள்ளி நிர்வாகத்துடன் மாணவனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழமையான பள்ளி சுவரை பராமரிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவனின் உறவினர்கள் பள்ளியின் மீது குற்றம் சாட்டினர்.
மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களுடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவனின் உறவினர்கள் சமாதானம் அடைய வில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.