9ஆவது இயற்கை மருத்துவ தினம் - 2026.. சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சென்னையில் கொண்டாட்டம்
சென்னை: இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஆண்டுதோறும் நவம்பர் 18-ஆம் நாள் தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 9-வது தேசிய இயற்கை மருத்துவ தினம், இயற்கை மருத்துவம் – ஆரோக்கியமான இந்தியா (Prakritik Chikitsa, Swasth Bharat) என்ற மையக்கருத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், கடந்த 02.10.2026 காந்தி ஜெயந்தி அன்று முதல் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு, 16.11.2026 அன்று சிறப்பு நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இரத்தச் சர்க்கரை அளவைக் கண்டறியும் சிறப்பு இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சிறப்பு மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் நீரிழிவு நோயை நிர்வகிப்பது குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக வினாடி வினா, சுவரொட்டி விளக்கக் காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், நோயற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
டாக்டர் ஒய். தீபாவின் நூல் வெளியீடு
விழாவின் முக்கிய அம்சமாக, டாக்டர் ஒய். தீபா (துறைத் தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை) எழுதிய "உடலே மருத்துவர்" என்னும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான நூல் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராம்குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் 300 க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையங்களிலும், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வு விழாவாக இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே ஐந்து இந்திய மருத்துவ முறைகளுக்கும் அதற்குரிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது சிறப்பம்சமாகும். குறிப்பாக இரண்டு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதனால் தமிழ்நாடு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிறசிகிச்சை, நீர் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குப்பிரசர் நறுமண சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை போன்றவை அளிக்கப்படுகிறது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் நன்மைகள்:
- உடலையும் அதன் உள் உறுப்புகளையும் பலம் பெறச்செய்து அதை புத்துணர்ச்சி அடைய செய்கிறது.
- நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, ஆயுளை நீட்டிகிறது.
- நோய்கள் வராமல் தடுக்கிறது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கிறது.
- கோபத்தையும், பயத்தையும் நீக்கி மனதையும் உடலையும் சாந்தபடுத்துகிறது.
- அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது.
- தசைகளின் இறுக்கத்தை தளர்வடையசெய்து முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடசெய்கிறது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம்
உள்நோயாளி பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் வசதியுடன் 3 ஆயுஸ் மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையமானது 34 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும், 26 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும், 26 தாலுக்கா மருத்துவ மனைகளிலும், 7 ESI மருத்துவ மனைகளிலும் சென்னையில் நான்கு மருத்துவ மனைகளிலும், ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், நிறுவப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் 1 யோகா மற்றும் இயற்கை மருத்துவர், 1 ஆண் சிகிச்சையாளர், 1 பெண் சிகிச்சையாளர் மற்றும் 1 பல்நோக்கு பணியாளர் ஆகியோருடன் மக்களின் நோய் தடுப்பிலும் நோய்களை குணப்படுத்துவதிலும் செயலாற்றி வருகின்றது.
தமிழ்நாட்டில், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 31 தாய்-சேய் சிறப்பு மருத்துவ மனைகள் உட்பட 51 யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள், தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 134 மருத்துவ நிலையங்களில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆரோக்கிய நலப்பிரிவுகள் (Yoga & Naturopathy wellness center) துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் பிரிவிலும் 1 யோகா மற்றும் இயற்கை மருத்துவர், 1 ஆண் சிகிச்சையாளர், 1 பெண் சிகிச்சையாளர் மற்றும் 1 பல்நோக்கு பணியாளர் ஆகியோருடன் மக்களின் நோய் தடுப்பிலும் நோய்களை குணப்படுத்துவதிலும் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்வி:
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சென்னை
- இளங்கலை (UG course) B.N.Y.S - 60 மாணவர்கள்
- முதுகலை (PG course) M.D (Y & N) – 3 சிறப்பு பிரிவுகள் (5 மாணவர்கள் / ஒவ்வொரு பிரிவிற்கும்)
சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம், செங்கல்பட்டு
- இளங்கலை (UG course) B.N.Y.S - 100 மாணவர்கள்
முதுகலை (PG course) M.D (Y & N) – 3 சிறப்பு பிரிவுகள் (10 மாணவர்கள் / ஒவ்வொரு பிரிவிற்கும்)
மேலும் 22 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.