முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

Su.tha Arivalagan
Dec 09, 2025,02:09 PM IST
- ச.சித்ராதேவி

சென்னை: தாய்மையின் பேரழகை எளிமையா விவரிக்கும் ஒரு பாடலைக் கேட்டிருக்கிறீர்களா.. இதுதான் அது!

முதல் மாதத்திலே உடையவனே தஞ்சம் என்றாள். 
இரண்டாம் மாதத்திலே எம் பெருமானே தஞ்சம் என்றாள். 
மூன்றாவது மாதத்திலே முக வெளுப்பு கொண்டிடுவாள். 
நான்காம் மாதத்திலே நல்ல மயக்கம் கொண்டாள். 
ஐந்தாவது மாதமோ அரைவயிறு பூரணமாய்.
ஆறாவது மாதம் அவள் அங்கம் எல்லாம் தங்கம். 
ஏழாவது மாதம் அவள் இடை சிறுத்துவிடுமாம். 
எட்டாவது மாதத்தில் திட்டுமுட்டு அடித்திடுமாம். 
ஒன்பதாம் மாதத்தில் ஓலை போல சுருண்டு விழுவாளாம்.. 
பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை பெற்றுக் கொள்வாளாம்.





இந்தப் பாடலின் அர்த்தம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். தெரிந்தால் வியப்படைவீர்கள். எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி ரத்தினச் சுருக்கமாக நம்மவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சரியமடைவீர்கள். அதன் உள்ளர்த்தம் இதுதான். படிங்க!

உடையவனே தஞ்சம் என்றாள் - அதாவது தான் கருவுற்றது அறிந்து கணவன் (உடையவன்) பெரும் பாசம் கொண்டு அவனை தஞ்சம் அடைந்து மகிழ்வாளாம் மனைவி.

எம் பெருமானே தஞ்சம் என்றாள்  - தனது வயிற்றில் தரித்த கருவின் வளர்ச்சிக்காக இறைவனை (எம்பெருமான்) வேண்டித் தஞ்சம் அடைந்து கடவுளை வேண்டிக் கொள்வாள் மனைவி

முக வெளுப்பு கொண்டிடுவாள் - கர்ப்பம் காரணமாக ஏற்படும் சோர்வு, வாந்தி, அல்லது உடல்நல மாற்றங்களால் முகம் வெளுத்துப் போதல். (பெரும்பாலும் குமட்டல், ஹார்மோன் மாற்றங்கள்)

நல்ல மயக்கம் கொண்டாள் - கர்ப்பத்தின் காரணமாக சோர்வு, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வு ஏற்படும் இல்லையா அதுதான் இந்த வரிக்கான அர்த்தம்.

அரைவயிறு பூரணமாய் - ஐந்தாவது மாதத்தில் வயிறு சற்று வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து, அரை வயிறு நிரம்பியது போல் இருக்கும் இல்லையா. அதை இந்த வரி உணர்த்துகிறது. 

அவள் அங்கம் எல்லாம் தங்கம் - கர்ப்பத்தின் அழகிய பொலிவு (Glow) ஏற்பட்டு உடல் பொன் போல் பிரகாசித்தல். அதாவது முகம் முழுக்க ஏற்படக் கூடிய அந்த புதிய பொலிவைச் சொல்கிறது இந்த வரி.

அவள் இடை சிறுத்துவிடுமாம் - வயிறு பெரிதாகும் போது இடுப்புப் பகுதி சிறுத்தது போல தெரியும் இல்லையா.. அதை இந்த வரி விளக்குகிறது. 

திட்டுமுட்டு அடித்திடுமாம் - கருவில் உள்ள குழந்தையின் அசைவுகள், உதைகள் (Fetal Movements/Kicking) தெளிவாகத் தெரிதல். அதைத்தான் திட்டுமுட்டு என்று சொல்லியுள்ளனர். 

ஓலை போல சுருண்டு விழுவாளாம் - வயிறு மிகவும் பெரிதாகி, நடமாட சிரமப்பட்டு, பிரசவ வலிக்குத் தயாராகும் நிலையில் நடக்க முடியாமல், வேலைகள் செய்ய முடியாமல், ஓலை போல் சுருங்கிப் படுத்துக் கொள்ளுதல்.

அழகான குழந்தை பெற்றுக் கொள்வாளாம் - இதற்கு விளக்கமே தேவையில்லை. சுகப்பிரசவம் அடைந்து அழகான குழந்தையைப் பெற்றெடுத்தல்.

எவ்வளவு அழகாக, ஒரு கர்ப்பிணியின் அனுபவங்களை எளிமையான கவிதை நடையில் கூறியுள்ளனர் பார்த்தீர்களா.

(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)செய்தி விளக்கத்தை உள்ளிடவும்