கேரள க்ரைம் ஸ்டோரி!
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
மும்பை. நரிமன் பாயின்டின் மேற்கு பகுதி. மரைன் டிரைவ் சாலையை ஒட்டிய சந்து பகுதியில் அந்த தேஷ்முக் பாண்டே லாட்ஜ் அழுக்கு பிடித்து அழுது கொண்டு, பல இடங்களில் காரை பெயர்ந்து செங்கல் பல்லை காட்டி இளித்துக் கொண்டிருந்தது.
நான்கு அடுக்கு கட்டிடத்தின்,ஏறி இறங்கும் படிக்கட்டின் 'ட ' வடிவ பகுதிகள் எல்லாம் பான் உமிழ்ந்து, ஒரு மாதிரி சிவப்பான சோகை கலர் காட்டியது.
இரண்டாம் அடுக்கின் முன் வரிசையில், படியிலிருந்து இடது புறம் 21ஆம் எண் அறையில் அவர்கள் இருந்தார்கள். இரண்டு வயது பெண் குழந்தை கத்திக் கொண்டிருக்க, தாய் சமாதானப் படித்திக் கொண்டிருந்தாள். அதை சட்டை செய்யாத அவன் அவளிடம் சொன்னான்.
" பாரு... நிலம ரொம்ப சிக்கல் ஆகும்னு தோணுது... அப்பாவும் தம்பியும் போன் பண்ணி இருந்தாங்க. ரொம்ப கவலை பட்டாங்க. அடுத்து நாம என்ன பண்ணனும்னு சீக்கிரம் யோசிச்சு ஆகணும் "
" சரிங்க... நாம இங்க இருக்கிறது அவ்வளவுது உசிதமில்லை. நாம நகர்ந்துக்கிட்டே இருக்கிறதுதான் சரினு படுது.இல்லன்னா நார்த் பக்கம் டிரெயின்ல போயிடலாம். கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப்போடலாம். ரெண்டு மூணு மாசம் ஆச்சுன்னா காட்டம் கொஞ்சம் குறைஞ்சிடும்.. அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு விரிவா ஆராயலாம் என்ன சொல்றீங்க? "
" சரிதான்... ஆனா பயமா இருக்கு. எந்த நேரம் என்ன நடக்கும்னு தெரியல. பிள்ளை வேற கூட இருக்கு. எத்தனை நாளுக்கு தான் இதுக்குள்ளேயே அடஞ்சு கிடக்க முடியும்? காலாற நடந்தா கடல் வந்துடும்.ஆனால் போய் பார்க்க மனசு வரலையே.. "
" நீங்க பயப்பட வேண்டாம்... எதுவா இருந்தாலும் நான் சமாளிச்சிக்கிறேன்.குழந்தைதான் நமக்கு இப்ப பலமே! பதட்டப்படாம குளிச்சிட்டு வாங்க. அப்பதான் மைன்ட் பிரஷ் ஆகும். "
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வெளியே கதவு தட்டப்பட்டது.
***
கேரளாவின் வயநாடு மாவட்ட புன்னம்புழா, இயற்கை-- வாழ்நாள் குத்தகைக்கு எடுத்த இடங்களில் ஒன்று. மொத்த பச்சை நிறத்தையும் வாங்கி பூமி நனைந்திருந்தது தோட்டவேலை காட்டு வேலை செய்யும் வீடுகளைத் தவிர மற்ற இடம் எல்லாம் எஸ்டேட் முதலாளிகளுக்கு சொந்தம். அப்படி ஒன்றான ஜாகீர் பாய் எஸ்டேட்டில் இன்று பரபரப்புக்கு பஞ்சமில்லை.
இன்ஸ்பெக்டர் மாதவன் மேனன் தன் டீமுடன் எஸ்டேட்டில் முகாமிட்டிருந்தார். மாதவன் மேனன் 5.6 அங்குலத்தில் உருண்டை முகத்துடன், கருகரு மீசையும், கர்லிங் ஹேருடனும், சற்று பூசிய மாதிரி உடம்பில், மலையாள நிறத்தில் ஏட்டன் தேசத்து இலக்கணத்தோடு, போலீஸ் உடைக்கு பொருந்தி போயிருந்தார்.
எஸ்டேட் ஓனர் ஜாகீர் பாய் அந்த இதமான சீதோஷ்ண நிலையிலும் வியர்த்துக் கொட்டினார்.
" யார் இங்க லிஜி? "
இன்ஸ்பெக்டர் கேட்க, அந்த லிஜி முன்னாள் நகர்ந்து "நான் தான் சார்... " என்றாள்.
" என்ன நடந்தது? " இன்ஸ்பெக்டர் கேள்வியில் போலீஸ் தோரணை தெரிந்தது.
" சார்... என் புருஷன் தான். பேரு பிஜு தாமஸ். மூணு நாளா காணும் சார். ஒரு நாள் வெயிட் பண்ணி பாத்துட்டு நேத்து தான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தேன்.ஆனா இன்னைக்கு வரைக்கும் அவர காணும் சார்... "
" குடிப்பழக்கம் இருக்கா? போன் பண்ணி பாத்தியா? "
" குடிப்பார் சார்...சில நாள் வீட்டுக்கே வர மாட்டாரு. ஆனா இப்படி மூணு நாளா தொடர்ச்சியா அவர் எப்போதும் வராம இருந்ததில்லை. அவர்கிட்ட போன் இல்ல சார்.. "
" புருஷன் என்ன வேலை பார்க்கிறான்? "
" சார் தோட்ட வேலை தான்..அவன் உண்டு வேலை உண்டுன்னு இருப்பான். இது லிஜி அவன் வைஃப். ஆபீஸ் வீடுன்னு கிளீனிங் ஒர்க் பாக்குறா.. "
சாகீர் பாய் முந்திக் கொண்டு சொன்னார்.
" பாய், உங்க கிட்ட கேட்கும்போது மட்டும் ஆன்சர் பண்ணுங்க. ஓகே? டோன்ட் டேக் அட்வான்டேஜ் "
ஜாகீர் பாய் சப்பென்று போனார். இன்ஸ்பெக்டர் தன் டீம் பக்கம் திரும்பி...
" கய்ஸ்.. வீடு தோட்டம் எல்லா பக்கமும் நோட்டம் விடுங்க. ஏதாவது எவிடன்ஸ் சிக்குனா பாருங்க. இப் பாசிபிள் கேதர் பண்ணுங்க... இஃப் நாட் பாசிபிள் டாக் ஸ்குவாட் இன்வைட் பண்ணுங்க..!"
சொல்லிவிட்டு கிளம்பி போனார் மாதவன் மேனன்.
( அடுத்த வாரம்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)