Tamil Short Story: சிரிச்ச மூஞ்சி!

Su.tha Arivalagan
Jun 05, 2026,12:53 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


காலையில் எழுந்ததும் அம்மா ஆவி பறக்க சூடாக காபி கொண்டு வந்து நீட்டினாள்... சிரித்த முகத்துடன் கவிதா அதை வாங்கிப் பருகினாள். சிரித்த முகத்துடன் அம்மாவிடம் காபி தம்ளரை கொடுத்துவிட்டு... குளித்து முடித்து அழகான மஞ்சள் நிற காட்டன் புடவை அதற்கு மேட்ச்சிங்கா வளையல் கம்மல் அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன் அலுவலகம் கிளம்பினாள்....


பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது,சிரிசச மூஞ்சி என்று ஒரு பெண் கூறியதும் அவள் காதில் விழுந்தது....


அலுவலக வேலை மும்மரம்... லஞ்ச் டைமில் தன் தோழியிடம்... சங்கீதா, நீ என்ன லஞ்ச் என்று கேட்டாள் சிரித்த முகத்துடன்...


வழக்கம் போல தயிர் சாதம் தான்...என்று அவள் கூற சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தார்கள்.


பக்கத்து டேபிளில் இருந்த மீனு,ஏன்டி மஞ்சு அந்த கவிதா என்ன ஒரு மார்க்கமா அலையுறா.. என்றாள்.


ஆமாண்டி... நானும் கவனிச்சேன்..அந்த சிடுமூஞ்சி என்ன, சிரிச்சிக்கிட்டே திரியுது என்றாள்...


அதற்கு ரவி, அவ இன்னிக்கி காலையில என்ன பார்த்தும் ஸ்மைல் பண்ணினா என்றான்.




வழியுது,.. துடைச்சுக்கோ... என்ற‌ மீனாவின் கமெண்ட்டுக்கு அனைவரும் சிரிக்க...சிரிச்ச மூஞ்சி கவிதாவும் திரும்பி ஒரு ஸமைல்...


மாலை‌ வீடு திரும்பியதும்... வேகமாக போய் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தாள்.


அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...

நேற்று இரவு ரிசப்ஷனுக்கு சென்றதிலிருந்து...


ஃபோட்டோவுக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து கொடுத்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக செயற்கைப் புன்னகையுடன் அலைந்ததால்... ஒரிஜினல் முகத்திற்கு வர முடியவில்லை என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்...


சாப்பிட வாம்மா , என்ற தன் அம்மாவிடம் கஷ்டப்பட்டு ஒரு முறை முறைத்து அப்புறம் வாரேன் போம்மா என்றாள்.


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).