மாசற்ற தேவதையே...ராதா... மனைவிக்கு ஓர் மடல்.. !
- பா. பானுமதி
மாசற்ற தேவதையே...ராதா...
மத்தளம் இசைக்க
மங்கலம் ஒலிக்க
மந்திரம் முழங்க மஞ்சள் குங்குமம் மணக்க மாலைகள் கழுத்தில் கனக்க மங்கள நாண் சூடி மன்னன் என அழைத்து மன்மதனாய் எனை நினைத்து என் மனையேறி வந்தவளே மல்லிகையாய் மாறி என் வாழ்க்கைக்கு வாசம் தந்தவளே.
பாசம் காட்டி பழக்கமில்லை நேசம் காட்டியது போல் நினைவில்லை வாச முல்லையே என் வாழ்வின் எல்லையே.
எனக்கென பிறந்தவள் என்று நினைத்தேன்
என் பணி செய்கையில் சினந்தேன்
சுயநலத்திலே சிறந்தேன்
உன் விருப்பு வெறுப்புகளை மறந்தேன்
எனக்கு ஏற்றவாறு உன்னை வளைத்தேன்
உன் சுயத்தை நானே தொலைத்தேன்
குடும்ப நலத்திற்காக துளைத்தேன்
கூவி குறை சொல்லி திரிந்தேன்
ஆண் மகன் என்ற ஆணவத்தில் அலைந்தேன்.. ஆனாலும் என்னையே நான் அறியாமல் என்னை உன்னிடத்தில் முழுவதுமாய் இழந்தேன்
நீ இன்றி நான் இல்லை என உணர்ந்தேன் என்றாலும் ஏற்றுக்கொள்ள தவிர்த்தேன்.
என்னை சரியாக புரிந்து கொண்டாய்
எல்லாமே தெரிந்து கொண்டாய்
சிரித்தபடி என் வானில் சிறகடித்தாய்
குடும்பத்தில் விளக்கேற்றி கோவில் ஆக்கினாய்
வேலை வேலை என்று நான் ஓட
குடும்பம் பிள்ளைகள் என்று என்னோடு நீ சேர்ந்து ஆட
இப்படியே காலம் கரைந்து விட்டது
நீ கடமை முடித்து கரையேறி விட்டாய் என்னை கடைசியில் தவிக்க விட்டு
இப்போது என் மனம் ஏங்குகிறது உன் அருகாமை வேண்டி தூங்குகிறது
பேச முடியாமல் வார்த்தையை தேங்குகிறது
நிம்மதி என்னை தொடாமல் நீங்குகிறது உன்னை எண்ணி உள்ளே மூச்சு வாங்குகிறது
என்ன செய்வேன் பெண்ணே
என்னை பொலிவுற செய்து பொன்னே
என்னை மணக்க செய்த மண்ணே
ஏன் விட்டு சென்றாய் விண்ணே
மதுரையில் மீனாட்சி என் மனதிலே உன்னாட்சி
காத்திரு நானும் உன் கை பிடிக்க வருகிறேன்
கண்ணன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)