கடலும் கடலின் ஒரு துளியும்!
- மைத்ரேயி நிரஞ்சனா
இது என்ன தலைப்பு? கடலின் ஒரு துளியும் கடல்தானே! இது ஒரு பெரிய விஷயமா? ஆனால் இந்தப் புரிதல் மிகப் பெரிய விஷயம் தான்..
கடலில் வாழ்கின்ற ஒரு குட்டி மீனின் கதை ஞாபகத்திற்கு வருகிறது.. அந்த குட்டி மீன் தன் அம்மாவிடம்.. அம்மா, கடல் எங்கே இருக்கிறது என்று கேட்கிறது.. அந்த அம்மா (மீனம்மா) கடலுக்குள்ளே தான் நீ இருக்கிறாய் என்று கூறுகிறது.. அந்த குட்டி மீனுக்கு புரியவே இல்லை திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்கிறது..
நாம் கடவுள் எங்கே என்ற கேள்விக்கு இதே தான் பதில்…எங்கே தேட முடியும்? அதற்குள்ளே தானே நாம் இருக்கிறோம்.. நமக்குள்ளே தான் அது இருக்கிறது.. கடவுள் தன்மையை தவிர இங்கு வேறு எதுவுமே இல்லை..(Everything is Divine)
நம்மில் பலருக்கு இந்தக் கேள்வி கூட எழுவதில்லை.. ஆனால் நாம் கஷ்டத்தில், பெரும் துன்பத்தில் இருக்கும்போது.. அது கடவுள் தன்மையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.
கீதையும் உபநிஷத்துக்களும் கூறும் விஷயம் என்னவென்றால்.. இந்த வாழ்க்கை ஒரு கனவு என்றும் விளையாட்டு என்றும் கூறுகிறது..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் ஒரு பெரிய பாடகர்.. அவர் பல சபாக்களில் பாடி விருதுகளும் வாங்கியிருக்கிறார்..
ஒரு நாள் அவர் இரவு தூங்கும் போது ஒரு கனவு வருகிறது அந்தக் கனவில் அவர் ஒரு சபாவில் பாடுவது போலவும், முடிவில் பலர் வந்து பாராட்டுவதாகவும் கனவு காண்கிறார். அவருக்கு பெருத்த சந்தோஷம்.. தூக்கத்திலேயே சிரிக்கிறார்.. பிறகு அடுத்த நொடி ஒரு கடைத்தெருவுக்குள் நுழைகிறார்.. மிகச் சாதாரண உடை அணிந்து இருக்கிறார்..
ஒரு நகைக்கடை டிஸ்ப்ளேயில் வைத்திருக்கும் சில நகைகளை மிகவும் ரசித்து பார்க்கிறார். அவர் கையில் ஒரு அழகான மோதிரத்தை எடுத்து ரசித்துக் கொண்டிருக்கும் போது இவர் யார் என்று தெரியாத கடை ஊழியர் திருடன் திருடன் என்று சத்தம் இடுகிறார்.. இப்போது எல்லாமே ஸ்லோ மோஷனில் நடக்கிறது.. பக்கத்துக் கடைகாரர்கள் அதைக் கேட்கிறார்கள்.. அங்கிருந்து சிலர் ஓடி வர, தெருவில் சென்ற மக்கள் அவர்களும் ஓடிவர.. ஒரு பெரிய கூட்டம் சேர்ந்து விடுகிறது.. இவருக்கு தான் யார் என்று எடுத்துச் சொல்வதற்கு நேரமும் இல்லை! வாய்ப்பும் இல்லை.. அவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஏதேதோ பேச ஆரம்பிக்க இவருக்கு மிகவும் அவமானமாக போய்விடுகிறது..
அவர்கள் யாருமே இவரை வாயைக் கூட திறக்கவிடவில்லை.. நாம் பட்டினி கிடப்பது ஒரு கஷ்டம் என்றால் இந்த மாதிரி பழி சொற்கள் கேட்பது ஒரு பெருந்துன்பமான அனுபவம் தானே..? கூனிக்குறுகிப் போகிறார்.. என்ன செய்வது என்றே தெரியாத ஒரு நிலை..
இப்போது என்ன செய்வது? இதற்கு தீர்வு என்ன? ஒரே தீர்வு என்ன தெரியுமா? காஷ்முஷ் கனவில் இருந்து விழிக்க வேண்டும்.. விழித்தால் எல்லாமே முடிந்ததா? எல்லாமே என்றால் அவர் பாடகராக பாராட்டுக்கள் வாங்கியதும்.. திட்டு வாங்க போவதும் எல்லாமே முடிந்துவிடும்..! மனிதர்களுக்கு இந்த வாழ்க்கை என்ற கனவில் இருந்து விழிப்பது ஏன் கடினம் (Man’s biggest predicament) என்றால் நல்ல அனுபவங்கள் / சந்தோஷங்கள் வேண்டும் என்று நினைப்பதும்.. துன்பங்களும் துயரங்களும் நமக்கு வேண்டாம் என்று நினைப்பதும் தான்..
அதனால் தான்.. பெருந்துனபங்கள் நமக்கு நாம் யார் என்பதை உணர்த்தும் விழிப்பு நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வாய்ப்புகளாக உள்ளன..
வாழ்க்கை என்பது அனைத்து அனுபவங்களுமே தான்.. துன்பமான சூழ்நிலைகளையும் அரவணைத்துக் கொள்ள பழகி கொண்டால் வாழ்க்கை விளையாட்டை நன்றாக விளையாடலாம்..
Eckhart Tolle சொல்வார்.. “நான்கு காதல் (I mean உண்மையான காதல்) தோல்விகள், ஒரு மனிதனை விழிப்புணர்வு அடையச் செய்துவிடும்”.
நம் தூக்கத்தில் இந்த உலகம் காணாமல் போய்விடுகிறது. காலை எழுந்தவுடன் கனவு நிலை ஆரம்பிக்கிறது..
கடலின் ஒரு துளி என்று நம்மை தனிப்படுத்திக் கொள்வதும்.. கடலே நாம்தான் என்று உணர்வதும் மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள பெரிய சாத்தியம்.. விழிப்போமா?
நாம் தொடர்வோம்..
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.