முடியலை சாமி!
Nov 01, 2026,01:53 PM IST
- கவிதை மழை அ.நவஜோதி அருண்
வானில்
கயிறு கட்டி
இழுக்கிறேன்
அந்தக் கடவுளை
எங்கள்
வயிறு
வற்றிக்கிடக்குதே
பூமியில்
ஏழையாக
படைத்து விட்டாய்
ஏழ்மைநிலை
ஏன்? கொடுத்தாய்
நறுக்கென்று
நாலு கேள்வி
கேட்க நினைத்தேன்
சுருக்கென்று
பதிலளித்தான்
ஒன்றுக்கே
கடவுள்
பேசிக்கொண்டே
திரிவாய்..
ஆட்சி
தேர்ந்தெடுக்க
தவறுவாய்
இணையவழி
பொழுதைக்
கழிக்க
கைப்பேசி
வாங்க மட்டுமே
உழைப்பாய்
ஒவ்வொரு
நாளும்
அதில் நெட்டுபோட்டு
உட்கார்ந்து
திளைப்பாய்...
உறங்கமின்றி
விழிகள் பிதுங்கி
கிடப்பாய்
உழைப்பை
மறந்து ஓய்ந்து
போய்தான்..
படுப்பாய்
சோத்துசட்டி
காலியானால்
கொதிப்பாய்
கடைசியில்
கோவிலுக்கு
வந்து வரம்
கேட்பாய்..
இல்லையென்றால்
என்மேல்
தவறு சொல்ல
கயிறு கட்டி
இழுப்பாயா...?
என்றான் கடவுள்
நான் கட்டி
இழுத்தக்கயிறை
வானிருந்து
எட்டி உதைத்தான்
கடவுள்
கட்டிலிருந்து
கவிழ்ந்து
விழுந்து எழுந்தேன்
நாளை பணிக்கு
போக முடிவெடுத்தேன்.
நன்றி இறைவா
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)