வீழ்வேனென்று நினைத்தாயோ! (கவிதை)

Su.tha Arivalagan
Sep 27, 2025,12:46 PM IST

- செ. திவ்யா ஸ்ரீ 


பெண்ணென்று நினைத்தாயோ ஏளனமாய் தான் நினைத்தாயோ?

வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தாயோ அடிமை என்ற பட்டம் கொடுத்தாயோ? 

சமையல் கூடம் அவளின் பாடம் என்று வரைமுறை கொடுத்தாயோ? 

பிள்ளை பெரும் இயந்திரமாய் அவளை மாற்றி வைத்தாயோ?

ஏட்டுக்கல்வி கூடாது என்று உறுதி கொண்டாயோ ?


தன்னைவிட உயர்ந்து விடுவாள் என்று பயம் கொண்டாயோ ?

அவளின் கனவுகளை சிதைக்க நினைத்தாயோ ?

கனவே காணக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தாயோ ?


விந்தை மனிதரை பார்த்தான் பாரதி 

பெண் அடிமையில் சிக்கி சிதைவதை கண்டான் 




அச்சம் கொள்ளலாகாது வா பாப்பா என்று அழைத்தான் 

அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லித்தந்தான் 


ஏட்டுக்கல்வியும் உனக்கு உயர்வைத் தரும் என்று புரிய வைத்தான்.

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று உரக்க உரைத்தான்


பெண்ணினம் எழுந்தது உலகத்தின் பேரொளியாய் உயர்ந்தது 

கல்வியில் மேம்பட்டது அனைத்து துறைகளிலும் கால் பட்டது 


பெண் இல்லாத துறை இல்லை அவள் இல்லாமல் உயர்வில்லை 

எத்தனை எத்தனை போராட்டங்கள் அத்தனையும் பாரதியின் வழிகாட்டல்கள்!

 

எட்டயபுரத்து மீசை கவியே நீ இல்லை எனில் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியே 

பெண்ணென்னும் கேள்விக்குறி இன்று ஆச்சரியக்குறியாக மாறியிருக்கிறது !

பாரதியின் வரிகளை படித்து புரிந்த காரணத்தால் 


வீழ்வேன் என்று நினைத்தாயோ ?

நாங்கள் எல்லாம் பாரதியின் வம்சம் என்பதை மறந்தாயோ ?


பெண்ணினத்தை கேலி செய்வோரை காலி செய்வதே எம் இனத்தின் வேலை 

ஆலையில் இட்ட கரும்பாய் நாங்கள் இருக்க மாட்டோம் 

சோலையில் உதித்த பூவாய் மலர்ந்து நிற்போம் 

வீழ்வேனென்று நினைத்த அனைவரும் முன்னாலும் 

வாசனை மலராக எங்கள் வாசனையை நுகரும்படி செய்து கொண்டிருப்போம். 


ஏனெனில் பாரதி கண்ட புதுமைப்பெண் மட்டுமல்ல

வீழ்வேன் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் 

வீழாத வானமாக இருப்போம் 

பாரதி கண்ட புதுமை பெண்களாய் நாங்கள்.....!


(கவிதை தீட்டிய செ. திவ்யா ஸ்ரீ  இளங்கலை தமிழ் மாணவி (பி.ஏ.தமிழ்). திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச்சங்கம் என்ற தமிழ்த்தொண்டாற்றும் அமைப்பு நிறுவி நடத்தியும் வருகிறார்)