சிவலிங்கப்பூவும், கங்கை நதியும்!

Su.tha Arivalagan
Mar 07, 2026,01:23 PM IST

- கவிதா அறிவழகன்


வாழ்க்கை என்பது, வாழ்வதற்கே;

இனிமையும், துன்பமும் இரண்டையும் தாங்கிய பயணம்.


இந்தக் கதையின் கதாநாயகனின் வாழ்க்கையை தொடர்ந்து வாசிப்போம்.


வாழ்க்கையின் முழு பாதையையும் சேர்ந்து நடக்கவில்லை என்றாலும்,


ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு தம்பதியாகவே அவர்கள் இருவரும் வாழ்ந்தார்கள்.


அன்பு இல்லாததால் அல்ல;


காலம் அவர்களின் பாதைகளை கடமைகளாகப் பிரித்ததாலே.


அவள் இருளையே கேள்வி கேட்காத விளக்கைப் போல வாழ்ந்தாள். அவன் முடிவில்லாமல் நீளும் பொறுப்புகளால் கட்டுண்ட மனிதனாய் வாழ்ந்தான்.




தன் வீட்டில் தான் ஒருவன் மட்டுமே என்று எண்ணினாலும்,

அவன் கடமைகள் எல்லையில்லாமல் விரிந்து கிடந்தன.

அவள் வாழ்க்கை தந்த ஒவ்வொரு வேடத்தையும் அழகுடன் நிறைவேற்றினாள்; மனைவியாக,  மருமகளாக, தாயாக, மௌனங்களை காக்கும் உறுதியான காவலாளியாகவே வாழ்ந்தாள்.


அவள் குரல் உயரவில்லை;


ஆனால் அவள் உள்ளம் எப்போதும் பிரார்த்தனையில் ஐக்கியமாக இருந்தது.

அவன் பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றினான்; அவற்றில், தன் சுதந்திரம், தாய்ப்பாசம், உதவிக்கரம், மற்றும் தன் நம்பிக்கைகள்.

அவள் உள்ளுலகில் அமைதி என்ற வீட்டைக் கட்டினாள்.

அவன் வெளியுலகில் கடமைகளை நிவர்த்தி செய்யும் வீட்டைக் கட்டினான்.

அவள் அமைதியாக ஒளிர்ந்தாள், எதையும் கேட்காமல் அழகிய புன்னகையுடன்.

அவன் உறுதியுடன் நடந்தான், 


பொறுப்புகளை சுமந்தபடி


அதிகம் கவனிக்காமல்.


அவளின் மௌனத்துக்கும், அவன் முயற்சிக்கும் நடுவே வாழ்க்கை கடந்து சென்றது, 


அன்பின்றி அல்ல,


ஆனால் அதிகம் வாசிக்கப்படாமல்.


ஒரு அழகான காலையில், விடியற்கால மந்தமூட்டம் மறைவதைப் போல அமைதியாக, அவள் இவ்வுலகத்தைப் பிரிந்தாள்.


உலகம் அதை மரணம் என அழைக்கிறது;


ஆனால் முனிவர்கள் அதை மோட்சம் என்கிறார்கள்.


ஆண்டுகள் சென்றன. நாட்கள் வேகமாக நகர்ந்தன.


ஆனால் வீடு இன்னும் அவளது அடிக்குரல்களை ஒலித்தது கொண்டு தான் இருந்தது.


அவளது சிரிப்பும், நடந்து செல்லுகையில் எழும் புடவை சத்தமும், அவளது சலங்கையின்  ஒலியும், கை வலையலின் ரீங்காரமும், அவனது நினைவுகளில் தங்கி,


 அவளை தொலைத்த ஏக்கம் அதிகம் தழுவியது.




அவளின் இல்லாமை ஒவ்வொரு இரவும், அவனருகே அவளின் மூச்சுக்காற்று, காணாத தோழனாய் வந்து அமர்ந்தது.


காலம் பொன்னானது; பொறுமையான கட்டிடக்கலைஞனும் கூட;


அது, அவனை காசியை நோக்கித் தள்ளியது.


அவன் யாத்திரைக்குத் தயாரானான். பவித்திரத்தை நாடி அல்ல, ஆனால் உள்ளத்தில் அளவிடமுடியாத சுமைகள் சோர்வடையத் தொடங்கியதால். 


அது மனிதனும், அவன் நினைவுகளும், சேர்ந்து பயணிக்கும் பாதை. அச்சுமைகளை கங்கையில் கரைப்பதற்காகவே காசிக்கு பயணமானான்.


 கங்கையோ, நீத்தோர் கடன் தீர்ப்பவரையும், பிணங்களையும், இறந்தோர் சடங்குகள் செய்பவரும், ஈசனை தரிசிக்க வருபவரையும், கங்கை நதியில் நீராடுபவரையும் அன்புதான் வரவேற்றது.


அந்த புனித கங்கை நதிக்கரையில் அவன் எளிமையாக வாழ்ந்தான். அவன் குறைவாக பேசினான். குறைவாக உணவுண்டான். அவன் அமைதியான பக்தியுடன் சிவனைத் தொழுதான். ஒவ்வொரு நாளும் அவன் கங்கை நீரில் முகம், கைகள், கால்களை கழுவி, பின்னர் நீர்கரையில் நீண்ட நேரம் அமர்ந்தான்.


நாட்களோ விரல்களில் உருளும் ஜபமாலையாகச் சென்றன. ஒவ்வொரு உதயமும் அவன் இதயத்தில் இருந்த ஒரு வருத்தத்தை கழுவியது. 


ஒவ்வொரு அஸ்தமனமும் கடந்த காலம் கட்டிய முடிச்சை தளர்த்தியது. 


மூன்று மாதங்கள்;


கங்கையோ, அமைதியாக அவன் யாரிடமும் சொல்லாத கதைகளை கேட்டு கொண்டிருந்தாள்.


பின்னர் குளிர்கால புயலுக்குப் பின் தூசி தணிவதைப் போல,


அவன் மனம் மெதுமெதுவாக அமைதியானது.


அவனைச் சுற்றிய காவி ஆடை சூரியனாலும் காற்றாலும் மங்கியது.


அவன் முகம் தெய்வீகமான  ஒளியுடன் பிரகாசித்தது;


அமைதி தானே வந்து தங்கியதுபோல். யாத்திரிகர்கள் வருவதும், செல்வதுமாக இருந்தனர்.


பூசாரிகள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


கோவில் மணிகள் தொலைவில் ஒலித்துக் கொண்டிருந்தன.


படகுகள் நீரைக் கடந்தன.


பிணங்கள் 


எரிப்பதற்காக வருவதும், போவதுமாக இருந்தன,


சுடுகாட்டுத் தீக்கள், கரைகளில் எரிந்தன, பிணங்களின் சாம்பல்கள்கள் கங்கையில் கரைந்தன.

அவன் அனைத்தையும் பார்த்தான்.


அனைத்தையும் உள்ளத்தில் உட்புகுத்தினான். அவன் கற்றுக் கொண்டது 


இந்த நித்திய உலகில் எதுவும் நமக்குச் சொந்தமில்லை.


அவை அனைத்தும் இந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தில் கடந்து செல்லும் மேகங்களைப் போன்றது.

அவன் தற்போது முழுமையாக உணர்ந்து நம்பினான்;


தன் மனம் இப்போது அமைதியில் லயிக்கிறது என்று,


ஆண்டுகளாக சுமந்த பாரங்கள் கங்கை ஓட்டத்தில் கரைந்துவிட்டன போல் உணர்ந்தான்.

அதனால், மடிந்த கரங்களுடன் மென்மையான மூச்சோடு அவன் மனதிற்குள் வேண்டினான்:


“என் மோட்சம்.”(ஆன்மா) அந்தக் மெல்லிய காற்றில் அவன் மூச்சு கரைந்தது.


கங்கை ஓட்டத்தில் அவன் பாரமும் கரைந்தது.

அவன் கண்களை மூடியபோது,


உலகம் அவனை இழந்தது. ஆனால், அந்த சில நிமிடங்களில், அவன்


தன்னைத் தானே முதன்முறையாக கண்டான் என்பதை விட உணர ஆரம்பித்தான்.


ஒரு அமைதியான மாலையில்,


அந்தி சூழும் நேரத்தில், அவனருகில் ஒரு சிவபக்த சந்நியாசி வந்து அமர்ந்தார்.


அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது கண்கள் அடிக்கடி அந்த அமைதியான மனிதனை நோக்கிக் கொண்டு இருந்தது.


ஆர்வத்தால் அல்ல.


அறிமுகத்தால் அல்ல.


ஆனால், அவன் மட்டும் கேட்கும் அந்த நதியின் மௌன இசையை கேட்பதுபோல்.


நாட்கள் சென்றன.


சந்நியாசியும் பார்த்துக்கொண்டே இருந்தார்.


அருகாமையில், ஒரு சந்நியாசி தம்மை கவனிப்பதை அவன் அறியாமல் இருந்தான்.


பௌர்ணமி வந்தது.

முழு நிலா தூங்கும் குழந்தையை பார்க்க வரும் தாயைப் போல வந்து அமர்ந்தது.


அதன் வெள்ளி ஒளி நதியிலும் அவனிலும் பொழிந்தது.


அவன் கரையோரம் அமர்ந்திருந்தான்.


பூஜைத் தீபங்கள், மலர்கள், சாம்பல், வேண்டுதல்கள்; அனைத்தும் நீரில் மிதந்தன. ஒரு எண்ணம் அவனுள் எழுந்தது:


“நான் சுமந்த தூசிகள் அனைத்தும் இந்த ஓட்டத்தில் கரைந்துவிட்டனவா?”


அவனுள் ஒரு கேள்வியாக எழுந்தது.


பல ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக அவன் இதயம் வேண்டியது:

மோட்சம் என்பது தொலைவில் கிடைக்கும் பரிசல்ல;


மன்னிப்பு என்பது

யாரோ தரும் தீர்ப்பு அல்ல;


நிறைவு என்பது

உள்ளம்

தன்னையே ஏற்றுக் கொள்ளும் அந்த நொடி.


அந்நேரம், மெல்ல மெல்ல உண்மையை உணருகையில், அவனருகில் அந்த சந்நியாசி வந்து அமர்ந்தார்.


அவனிடம் சில எளிய கேள்விகளோடு பேச்சுக்கொடுத்தார்.


“எங்கிருந்து வந்தாய்?

எவ்வளவு நாள் தங்கினாய்?

எந்த விரதம் மேற்கொண்டாய்?”


ஆனால் அந்த எளிய கேள்விகளின் கீழ்


அவன் ஆன்மாவில் ஏதோ ஒரு இனம்புரியாத அலை ஒன்று கிளம்பியது.


அவன் உள்ளுணர்வு அவனிடம் உரைத்தது :


“அவர் என்னிடம் மோட்சத்தைப் பற்றி சொல்ல வருகிறார்…”


அவன் பேசத் தொடங்கினான்.


சிவனை பற்றியும், கங்கையை பற்றியும் கேள்விகளாக கேட்க தொடங்கினான்.


சந்நியாசி, சில அளவளாவலுக்கு பின், 


அவனது குடும்பத்தைப் பற்றி கேட்க செய்தார்.


யாரிடமும் அதிகம் பேசாத அவன், சந்நியாசியின் அன்பான முகம், அவனை பேசச்செய்தது.


தன் பெற்றோருக்காகவும், செய்த தியாகங்களைப் பற்றி பேசினான்,

தன் குழந்தைகளை வாழ்க்கையில் நிலைநிறுத்தியதைப் பற்றிக் கூறினான்,

தன் கூடப்பிறந்தவர்களுக்கு உதவிகள் மட்டும் அல்லாமல்,

துணை  நின்றதையும்,

தேவை என்று வந்தவர்களுக்கு துணை நின்றதையும்,

நெருங்கிய நண்பர்களுக்கு 

உதவிகள் புரிந்ததையும்,

இவ்வாறு, தன் பாரங்கள் அனைத்தும் இப்போது கங்கை ஓட்டத்தில் கரைந்துவிட்டதாகச் சொன்னான்.


பின் மெதுவாகக் கூறினான்:

“என் கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன… என் மனைவிக்கான கடமையும் எந்தவிதமான தடைகள் இல்லாமல் முடித்து விட்டேன்.


என் மனம் இப்போது அமைதியில் உள்ளது.


எதுவும் என்னை கட்டிப் போடவில்லை.

நான் சிவபெருமானின் திருவடியில்

என் உயிரை சமர்ப்பிக்கவே இங்கு வந்தேன்.”


அவனின் வார்த்தைகள் கங்கை நீரில் விழுந்த கல்லைப் போல

அமைதியின் மேல் அலைகளை எழுப்பின.

சந்நியாசி அமைதியாக கங்கையை நோக்கிக் கொண்டிருந்தார்.


கங்கையோ, சந்நியாசியிடம்


“அவன் மனைவியின் பிரார்த்தனைகள் அவனுக்குத் தெரியாது, வாழ்க்கைப் பிரயாணத்தில் மனைவியின் அர்த்தமும் தெரியாது,”


என்று நினைவூட்டியது போல இருந்தது.


சில நொடிகள் மௌனம் காத்த பின் சந்நியாசி மெதுவாகப் பேசத் தொடங்கினார்:

“உன் மோட்சத்திற்கு,  

நீ நினைப்பதற்கு முன்பே வேண்டிய அந்த ஆன்மாவிற்ககு


நன்றி கூறினாயா?

நீ செய்த கடமைகள் அனைத்தையும் பட்டியலிட்டாய்.


ஆனால்,

ஒருவர் உனக்காக செய்த பிரார்த்தனையை

தெரியப்படுத்தவும், உன் பிரயாணத்தில், அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றிய ஆன்மாவைப் பற்றி நான் பேச வந்துள்ளேன்.”


அவன் நெற்றியில் சுருக்கம் தோன்றியது. அவன் திகைத்தான்.


“யார்…?”


“உன் மனைவி,” என்றார் சந்நியாசி மெல்லிய இசையான குரலோடு.


“அவளுக்கான கடமையும் முடிந்தது என்று சொன்னாய்.

ஆனால்,


அவள் உனக்காக செய்த கடமைகளை,


ஒருநாளாவது எண்ணிப் பார்த்தாயா?”.

அவன் கண்கள் கங்கை ஓட்டத்தை நோக்கின.

அவன் மனம் கடந்த காலத்துக்குள் இறங்கியது.


“நீ அவளருகில் வாழ்ந்தாய்;


ஆனால், அவளிடம் ஒருபோதும் உண்மையாக வந்து சேரவில்லை.


அவள் உன்னிடம் அன்பை கேட்கவில்லை,


ஏனெனில், அன்பு கேட்கப்படுவதல்ல,

அது உணரப்படுவது.

நீ வெளியுலகக் கடமைகளில் 

மூழ்கி இருந்தாய்.

அவள் உள்ளுலகக் கடமைகளில்  கண்ணியமாக இருந்தாள்.

நீ உலகத்துக்காக ஓடிக்கொண்டிருந்தாய்.


நீ அவளுக்கு உணவு, உடை, வீடு, பாதுகாப்பு கொடுத்தாய்.

ஆனால், அவள் உனக்கு

அறியாமலே, தாங்கும் சக்தியை கொடுத்தாள்.


நீ தளராமல் இருக்க அவள் தாங்கினாள்.


நீ அமைதியைத் தேடி இங்கே வந்தாய்.


அவள் உன் அமைதிக்காகவே 

தன் வாழ்க்கையை தியாகமாக வாழ்ந்தாள்.”


அவன் மூச்சு கனிந்தது.

கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தில் உருண்டன.


“ஒரு நாளும் அவள் உன்னை மறக்கவில்லை, உன் கடமைகளில் தடையாக இருந்ததும் இல்லை,


அவளின், ஒவ்வொரு பிரார்த்தனையிலும் உன் பெயர் இருந்தது,

அவள், உன் மனஅமைதிக்காக வேண்டினாள்,

உன் சுதந்திரத்திற்காக வேண்டினாள்,


உன் மோட்சத்திற்காகவும் வேண்டினாள்.”

தான் மனைவியின் பிரார்த்தனைகளை சற்றும் எதிர்பாராததால்,

அவனின் மனம் சற்று கனமானது, பின்

சந்நியாசி தொடர்ந்தார்:

“ஒருநாளாவது

அவள் அமைதியை வாசித்தாயா?


அவள் மௌனத்தில் இருந்த பிரார்த்தனையை கேட்டாயா?”


அவன் பதில் சொல்லவில்லை.

அவனுக்கே அவன் பதில் தெரிந்திருந்தது.


சந்நியாசி தன் கையை அவனது மிருதுவான கையை அழுந்த பிடித்தார்.


அந்தத் தொடுதலில்,

அவள் அருகில் அமர்ந்திருந்த நாட்களின் வெப்பம் திரும்பியது.

நினைவுகள் வெள்ளமாய் வந்தன.


வருத்தங்கள் கண்ணீராய் உருண்டன.

அவன் அமைதியாக அழுதான்,

வறண்ட மண்ணில் மழை பெய்வதைப் போல.


சந்நியாசி மேலும் சொன்னார்:


“மோட்சம் என்பது

பொறுப்புகள் முடிந்த பின் கிடைப்பதல்ல.

புரிதல் பிறந்த பின்பு கிடைப்பது.”


அவன் உள்ளத்தில் தடையாக இருந்த மடை உடைந்தது.


அதே நேரத்தில், ஏதோ ஓர் நினைவு புதிதாகப் பிறந்தது.


“உன் மனைவி

உனக்கு மோட்சம் கிடைக்க

முன்னமே பிரார்த்தித்தாள்.

அவள் பிரார்த்தனையின் பலன்தான்

இன்று நீ இங்கே அமர்ந்திருப்பது, அதோடு, உனக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையும் கொடுத்திருக்கிறாள்.”


அவன் கண்கள் சந்நியாசியின் கண்களை 

பார்க்க முடியாமல் தலையைத் தாழ்த்தினான்.


“மோட்சத்தைத் தேடாதே,

அன்பை புரிந்துகொள்,

நன்றி சொல்லக் கற்றுக்கொள்.

பின்னர், மோட்சம்

தானாகவே உன்னைத் தேடி வரும்.”


கங்கை ஓட்டம் மாறவில்லை.

நிலா ஒளி மாறவில்லை.


ஆனால் அந்த மனிதனின் மனம் புரிதலில் மாறத் தொடங்கியது.


“அவள் மகிழ்ச்சியுடன் மோட்சம் அடைந்தாள்.


அங்கும் கூட,

அவள் ஆன்மா, உனக்காக பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறது.”


பின் அவர் மெதுவாக கங்கையை பார்த்துக்கொண்டு சொன்னார்:


“இன்று பௌர்ணமி.




கங்கை ஆரத்தி தரிசனம் செய்.

இந்த காவியாடையை அகற்று.

உன் பிள்ளைகளிடம் திரும்பிச் செல்.

மோட்சத்தைத் தேடாதே.

அது உன்னைத் தேடி வரும்.

சிவன் விரும்பும் போது

அவன் தானே வந்து

உன் ஆத்மாவை மெதுவாக உயர்த்துவான்.”


சந்நியாசி திரும்பிப் போகும்போது இறுதியாகச் சொன்னார்:


“நீ அவளின் இல்லாததைத் தேடித் துயரப்படுகிறாய்.


ஆனால், அவள் உன் அமைதியை கொண்டாடுகிறாள்."


கங்கை நதியின் படிகளில் அந்த கணவன் அப்படியே அமர்ந்திருந்தான். கங்கை நதி அந்தப் படிக்கட்டுகளில் மோதி, ஏதோ ஒரு ரகசியத்தை அவனிடம் முணுமுணுத்தது. அவன் தன் கைகள் கங்கை நீரை ஏந்த, அப்போது, ஒரு சிறு அலை, ஒரு மெல்லிய மூச்சுக் காற்றைப் போல, ஒரு ஒற்றை நாகலிங்கப் பூவை அவன் கைகளில் கொண்டு வந்து சேர்த்தது. 


அது பால் போன்ற வெண்மையாகவும், அதன் இதயம் தங்க நிறத்திலும் இருந்தது;


அந்தி சாயும் வேளையில் ஏற்றும் ஊதுபத்தியின் மணம் அதிலிருந்து வீசியது.


அவன் அதை கையில் எடுத்தபோது, அதன் காம்பில் ஒரு மூவிலை வில்வம் ஒட்டியிருப்பதைக் கவனித்தான். 


தான் மனைவி தினமும் சிவனை பூஜிக்கும் வில்வம் அல்லவா இது, அதுவும் 

மூவிலையில் தான் பூஜிப்பாள்.


அவன் மனதில்

அந்த வில்வம் அவனிடம் பேசவும் தொடங்கியது:


"ஒரு இலை நீ செய்த கடமைக்காக,

இன்னொன்று நீ தேடிய சுதந்திரத்திற்காக,

நடுவிலுள்ள இலை நாம் பகிர்ந்து கொண்ட அன்பிற்காக."


அவன் அந்தப் பூவை தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். 


அந்த சந்நியாசி அவனிடம் வெறும் வார்த்தைகளை மட்டும் பேசவில்லை; அவளது ஆன்மா அந்த சந்நியாசியின் வழியாகப் பேசியதை அவன் உணர்ந்தான், சிவனைத் தேடி இனி அவன் காசியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.  வாழ்நாள் முழுவதும் தன்னுடன் வாழ்ந்த தன் மனைவியின் எண்ணங்களே நினைவுகளாக இருந்தது, இப்போதுதான் முதன்முறையாக அவன் முழுமையாய் உணர்ந்து, இறைவனைக் கண்டான்.


மேலே வானில் நிலவும், ஓடும் கங்கையும் புன்னகைத்தது. 


பார்வைகளுக்கு அப்பால் எங்கோ ஓரிடத்தில், மோட்சம் பெற்ற அந்த ஆத்மாவும் புன்னகைத்தது.


அவன் மனைவி அவனை உள்ளுணர்வோடு ஒன்றி பேசவும் செய்தாள்,

"இந்த வட்டம் உடைந்துவிடவில்லை, அது இன்னும் விரிவடைந்திருக்கிறது. கங்கை எப்படி கடலைச் சென்றடைகிறதோ, அப்படியே என் பிரார்த்தனைகள் உன் மூச்சுக் காற்றோடு கலந்துவிட்டன. உன் இதயத் துடிப்புகளுக்கு இடையே உள்ள மௌனமாகவும், இந்தப் புனித மண்ணில் உள்ள அமைதியாகவும் நானே இருக்கிறேன். என்னை கடந்த காலத்தில் தேடாதே; இந்த நதியில் நீ மிதக்கவிடும் தீபத்தின் ஒளியில் என்னைக் கண்டுகொள். நம் கடன்கள் தீர்ந்துவிட்டன, ஆனால் நம் பந்தம் என்றும் அழியாதது."


அவன் அவளின் பிரார்த்தனைகளைப் புரிந்து கொண்ட அந்த நொடியில், அவன் வெறும் துயரத்தை மட்டும் அனுபவிக்கவில்லை; அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்த உன்னதமான பிணைப்பின் உயரிய தத்துவத்தை அவன் ஒரு "தீட்சையாக"பெற்றுக் கொண்டான்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)