அந்தக் காலத்துல பிள்ளைகள் அப்படி இருந்தாங்க.. இப்போ எப்படி இருக்காங்க?
Nov 14, 2025,04:21 PM IST
- ரா.பிரேமாகண்ணன்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் என்றாலே சுட்டிகள் தான். விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவாறு தற்போதுள்ள குழந்தைகளும் மாறி வருகின்றன.
அக்கால மற்றும் இக்காலக் குழந்தைகளை பற்றி பார்ப்போம்.
அக்கால குழந்தைகள் தாத்தா பாட்டிகள், தாய் தந்தையர்கள் தாய் தந்தையர்கள் கூறுவதை கேட்டு பொறுமையாக செயல்படுவார்கள். மூத்த குழந்தைகள் தானாகவே சிறிய குழந்தைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளும்.
அக்கால குழந்தைகள் மஞ்சப் பையில் ஸ்லேடு குச்சிபோட்டுக் கொண்டு பள்ளிக்கு சுமாராக மூன்று கிலோ மீட்டர் கூட நடந்து செல்வார்கள். தாய் தந்தையர்கள் நீ என்ன படிக்கிறாய் என்ன எழுதுகிறாய் என்று ஒரு நாளும் கேட்டதும் கிடையாது பிள்ளை என்ன படிக்கிறான் என்று பார்த்ததும் கிடையாது.
அக்கால குழந்தைகளும் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். வாழ்க்கையில் நிறைய சாதித்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தை படித்திருந்தால் போதும் பின்வரும் குழந்தைகளை அந்த மூத்த குழந்தை வழி நடத்திச் சென்று சரியான பாதையை இளைய குழந்தைக்கு காண்பித்து விடும். போட்டி பொறாமைகள் இருந்ததில்லை. அன்பு ,பாசம், உரிமைகள் மேலோங்கி இருந்தது.
மூத்த குழந்தை மற்ற குழந்தைகளை கைப்பிடித்து பள்ளிக்கு செல்வதாகினும், சரி வெளியிடங்களுக்கு செல்வதாகினும் சரி கவனமாக கூட்டிச்செல்லும். சாப்பிடும் போதும் ஒரு குழந்தை மற்ற குழந்தையை பார்த்து அழகாக சாப்பிட்டுவிடும். கீழ மேல சிந்தி, தண்ணீர் கொட்டி, கீழே விழுந்தாலும் தானே எழுந்து நடந்து, யாராவது பார்த்தாலும் கூட , விழுந்த வழி தெரியாமல் சிரித்து ஓடிவிடும்.
மேலும் உறவுகளை உரிமையோடு அழைத்து பேசி கொஞ்சி விளையாடும். பள்ளிப் பருவத்தில் ஆசிரியர்கள் தூண்டுதலின் பேரில் மட்டுமே பாடங்களை கவனமாக படித்து இன்று பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்த குழந்தைகளும் உண்டு. அக்கால குழந்தைகள் சுயமாக சிந்தித்து முன்னேறியவர்கள்.
இக்கால குழந்தைகள்
விஞ்ஞான குழந்தைகள். தாய்மார்கள் கருவிலேயே மருந்து மாத்திரைகள் உண்பதால், அதற்கு ஏற்ப குழந்தைகளும் மிகவும் சுட்டியாக காணப்படுகிறார்கள். மேலும் , ஒன்றே ஒன்று கண்ணே கண்ணே என்று இருப்பதால் தாத்தா பாட்டிகள் மற்றும் தாய், தந்தையரின் செல்லம் அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகள் பார்த்ததை கேட்டதை உடனே தாய், தந்தையர்கள் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இக்கால குழந்தைகளிடம் முரண்டு பிடிக்கும் குணம் அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகள் வெளியில் விளையாடும் நேரம் குறைந்து செல்போனில் மூழ்கி இருக்கும் நேரம் அதிகமாக காணப்படுவதாலும், பெற்றோர்களும் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் தான் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாலும், உடலிற்கு தேவையான உடற்பயிற்சி இன்றி குழந்தைகளிடம், உடல் பருமன் அதிகமாக காணப்படுகிறது.
விஞ்ஞான உலகத்திற்கு தகுந்தாற்போல் செல்போன்களை கையாள்வதிலும் சரி ரிமோட்களை கையாள்வதிலும் சரி குழந்தைகள் படு சுட்டி.
எப்படிப்பட்ட குழந்தைகளாக இருந்தால் என்ன.. நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.. அதுதான் முக்கியம்.