அறத்தின் வழி நடந்து .. அன்பின் அருமை உரைத்தவர் .. உலக உத்தமர் காந்தியடிகள்!

Su.tha Arivalagan
Oct 06, 2025,12:42 PM IST

அறத்தின் வழி நடந்து 

அன்பின் அருமை உரைத்தவர் 


அகிலம் யாவும் போற்ற 

அமைதியின் பெருமை காத்தவர் 


அகிம்சை நொறி நாடி 

அரியன பலவும் புரிந்தவர் 


அறியா வயதினிலே 

அரிச்சந்திரன் கதை கேட்டு 

வாய்மையைப் போற்றினார் 




அயலகம் சென்று 

சட்டம் பயின்றாலும் 

தாயகம் தனை

உயிரென நேசித்தார் 


அந்நிய மண்ணிலும் 

அநீதி நீக்கிட 

ஆற்றலுடன் குரல் கொடுத்தார் 


அன்னை நாட்டின் 

அடிமைத்தளை நீக்க 

அரும்பெரும் செயல் புரிந்தார் 


அந்நியரைப் புறக்கணிக்கும் 

ஒத்துழையாமை இயக்கம் 


உரிமைக்குரல் ஓங்க 

உப்பு சத்தியாகிரகம் 


வல்லமை உணர்ந்திட 

வெள்ளையனே வெளியேறு 


ஆன்ம பலம் பெருகிட 

உண்ணா நோன்பு 


கண்ணியம் காத்திடும் 

கதராடை இயக்கம் 


அண்ணல் இயற்றிய ஆர்ப்பாட்டங்கள் 

நடு நடுங்கச் செய்தது ஆங்கிலேயரை 


கத்தியின்றி இரத்தமின்றி

சத்தியத்தின் பாதையில் 

ஆயுதங்கள் வாய் மூடிப்போக

உரக்கக் கேட்டதோ 

அகிம்சையின் முழக்கம் 


மண்ணில் புதைந்த வித்தாய் மகாத்மா 

விண்ணை தொடும் விருட்சமாய் 

விடுதலை வீரர்கள் 

கிட்டியது வெற்றிக்கனியாய்

பாரதத்தாயின் சுதந்திரம் 


எண்ணிய முடித்திடும் 

திண்ணிய நெஞ்சராய்

ஏற்றம் கண்டவர் 

உலக உத்தமர் காந்தியடிகள் 


(கவிதையை எழுதிய பாரதி இளங்கவி கீர்த்தனா பு, எம்.ஏ.,நெட் படித்தவர். தூய தமிழ்ப் பற்றாளர். திருப்பூர் மாவட்டத்துக்காரர். திருவண்ணாமலை இரத்தினா செல்வக்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்)