சீட்டுகளும் நோட்டுகளும் சிக்கல்கள் போக்கும் கொள்கையும் கோட்பாடும் என்னவென்று கேட்கும்!

Su.tha Arivalagan
Mar 05, 2026,04:42 PM IST
- எம்.கே.திருப்பதி, திருப்பூர்

தொடங்கியது
சுழற்சிமுறை சூது
ஆண்டுகள் ஐந்துக்கொருமுறை 
அவை வந்துபோகும் 
தேர்தலின் போது!

கட்சிகளின்
கணக்குகள் மாறும்
பிரிந்து போனால்
பிணக்குகள் தீரும்!

சீட்டுகளும் நோட்டுகளும் 
சிக்கல்கள் போக்கும் 
கொள்கையும் கோட்பாடும்
என்னவென்று கேட்கும்!

மணிக்கொரு பேச்சு
அணிக்குகொரு பேச்சு
அடிநா பிறழ்ந்து 
அரை நூற்றாண்டாச்சு!

நேற்றைய முகாமை 
நீட்டி முழங்கியவர் 
இன்றைய முகாமில்
ஈட்டியாய் பாய்கிறார்!

வசவுச்சொல்லை 
நெசவு செய்து
கொதிகலன்  நீராய் 
வழியெங்கும் காய்கிறார்!



அரசியலில்
கொள்கை உண்டு!
உன்கை என்கை 
எத்தனை
'கொள்'  'கை'  என்று!

கோட்பாடு உண்டு!
நாட்பாடு எப்படி 
நலிந்து போனாலும் 
நாணக்கூடாது என்று!

நலிவுத் தொகை என்று 
மலிவுத்தொகை காட்டி 
மண்டியிடும் மக்களிடம் 
மலையாய் தனைக்காட்டும்!

நெளியும் புழுவை இட்டு
நீலத்திமிங்கலத்தை  
நீ அறியாமல் 
நிலத்தில் அள்ளி கொட்டும்!

இக்கட்சி அக்கட்சி 
எக்கட்சி இங்கு 
மக்கள் கட்சி?

அதுவும் இதுவும் என
மாறி மாறி வந்தாலும்
தேறித் தேறி 
ஊதிப்போய் கிடக்கின்றன 
ஓட்டு வாங்கிய கட்சிகள்!
திக்குத் தெரியாமல் 
சிக்கிக் கொள்கின்றன 
தேர்தல்காலப் பட்சிகள்!

இதுதான் விதியென
என்றானபின்
பொதுதான் புலம்பி   
போக்குகிறது பொழுதை 

அடுத்தடுத்து
அரசியல் ஆலமரம்
நிலத்தில் ஊன்றுகிறது
நீளவிழுதை!

தேர்தல் திருவிழாவிற்கான 
முஸ்தீப்புகள் 
முளைவிடத் தொடங்கிவிட்டது!

முடி மன்னன்  தேர்வுக்கு 
மக்களும் 
முடிவுகாண தொடங்கிவிட்டது!

(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)