பள்ளிக்கூடம்
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
புத்தகப் பையை
முதுகில் சுமந்து
புத்துணர்வு கொண்டு
முகம்மலர நடந்து
சீருடையில் அனைவரும்
சிறப்பாய் தெரியும்
சீக்கிரம் காலையில்
சேர்ந்திடும் நேரம்
தாமதமானால் தடியால்
அடியும் கிடைக்கும்
தாமதமாக வர காரணம் பலவாறு சொல்லி
எல்லாரும் ஒன்றாய்
எல்லாமும் கற்போம்
பணக்காரன் ஏழை
பாகுபாடுகள் இல்லை
பலவித சாதிகள்
பரந்தே கிடப்பினும்
பாரில் நாங்கள்
படிக்கும் சாதியே
மண்ணில் என்றும்
மாணவராய் மலர்வோம்
எண்ணும் எழுத்தும்
கண்ணென கொண்டே நாம்
ஏட்டில் எழுதியதை
வீட்டிலும் படித்திட
ஏக்கமும் ஏனடா
எழுதுவோம் நாமும்
அறிவை அள்ளித்தரும்
அன்பான ஆசானும்
தவறுகளைத் திருத்தி
தட்டிக்கேட்கும் குருவும்
அடிக்கடி சண்டையிட்டு
அடித்துக் கொண்டாலும்
அளவில்லாமல் பேசும்
அக்கறையில் நண்பர்கள்
ஆலமரத்தடி நிழலில்
ஆடிடும் நினைவுகளில்
பந்தாட்ட மைதானம்
வந்தாடுமே நித்தம்
மதியவுணவு அறைக்கூடம்
மகிழ்ச்சியை கூட்டும்
ஆசிரியர் ஓய்வறை
ஆச்சரியமாய் காட்டும்
படித்தவனும் படிக்காதவனும்
பாகுபாடு இல்லாமல்
ஒன்றாக தரையில்
ஒற்றுமையாக அமர்ந்திடும்
பள்ளிக்கூட கனவுகள்
பருவமாறிய நினைவுகள்
கள்ளமில்லா உள்ளங்களில்
களிப்பென கனியும்..!!
(கவிநிலவு சுமதி சிவக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)