இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
- எம்.கே.திருப்பதி
இயக்குனர் இமயம்
இயக்குனர்களின் சமயம்!
இயக்கிய படங்கள்
இளக வைக்கும் இதயம்!
வேதம் புதிதில் நீ
'வேணாத இனவாத'
வாதம் பேசினாய்!
கடலோரக் கவிதைகளில்
கரட்டுக்குள்ளும் நீ
காதலை வீசினாய்!
கிழக்குச் சீமையிலே நீ
உடன்பிறப்புகளின்
உச்சம் காட்டினாய்!
பாசத்தை பங்கிட
பட்டா இல்லையென
படம் வரைந்து மாட்டினாய்!
அது அகமுடையாளின்
அகங்காரமா? அல்ல..
அந்த கன்னியின்பால்
கனிந்த அதீத பாசமா?
அல்லது அங்கிங்கும்
அறிந்தும் அறியாமலும்
அளந்துவிட்ட
காதலா காமமா...?
விடை எழுதாத மாணவனாய்
நான் இன்னும்
வெற்றுத் தாளுக்கு - விடை
தேடிக் கொண்டிருக்கிறேன்....
உன்
முதல் மரியாதைக்கு
என்
முதல் மரியாதை!
சுயம் இழந்து
சொக்க வைக்கும் -- உன்
பாடல்களின் லயம்!
அல்லி நகரத்தில்
அவதரித்த
கள்ளிக்காட்டுக் காவியம் நீ!
பட்டிக்காட்டில் பிறந்து
படம் என்றொரு
படம் எடுத்த
பள்ளிக்கூடம் நீ!
நீ இல்லா உலகில்
படக் கொட்டகைகள்
பாதி மூச்சுதான் விடுகிறது!
சினிமாவின் சிகரமே!
சினிமா திசுக்களுக்கு
மீண்டும்
இனிமை கூட்டவா!
இப்போது நீ
இன்னொரு தாய்மடி
சூல் கொண்டாய்!
கருப்பை திறந்து
மீண்டும் கதைபேச வா....
வெண்கல குரலில்
எங்குலம் செழிக்க!
எதிர்காலத் தலைமுறைகள்
உன் வரவை
என்னைப் போலவே
எதிர்பார்த்து கிடக்கிறது!
கடற்கரை மணல்கள்
கண்ணீர் விடுகிறது!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)