செஃப் தாமு அப்பா!

Su.tha Arivalagan
Oct 26, 2026,02:55 PM IST

த. ரஜிதா


இதயத்தில் இந்தியக் கொடி

இருக்கும் இதயங்களின் 

இருப்பிடமோ பல கோடி.

குக் வித் கோமாளியின் 

முடி சூடா மன்னன்.

கார்மேக வண்ணன்.

வெண்ணை மனம் 

கொண்ட கண்ணன்.


சக்கர நாற்காலி வந்து அமர்ந்தாலும் 

சர்க்கரையாய் இனிக்கும்  சிரிப்பு.

சுற்றி இருக்கும் அனைவரையும் 

பற்றிக் கொள்ளும் உங்கள் பூரிப்பு.




குழிக் கரண்டி எண்ணெய் ஊற்றும்

குழந்தை உள்ளம்.

தக்காளியை கைகளால் 

பிசைந்து போடும் எங்கள் செல்லம்.

மிளகாய் பொடி, மல்லிப்பொடி 

விகிதங்களை மாற்றியே 

வித்தைகள் பல செய்வீர்.


கின்னஸ் சாதனை செய்த 

கிங் மேக்கர் நீங்கள்.

சமையல் கலையில் முனைவர் 

பட்டம் பெற்ற முதல் 

இந்தியர் நீங்கள்.

பாமரனுக்கும் பாசம் காட்டும் 

பத்மஸ்ரீ நீங்கள்.


"டாப் நாட்ச்" என்று சொல்லும்போது 

உற்சாகம் பற்றிக்கொண்டு, 

"அப்பா"  என்று ஆவலோடு 

உங்களை சுற்றிக்கொண்டு,

ஓடி வந்து உங்கள் 

தொப்பையை கட்டிக்கொண்டு,

மகிழ்ந்து திளைக்கும் 

மக்களை விட்டுச் சென்றீர்.


தாமு அப்பா,

அரசு பள்ளி குழந்தைகளின் 

மதிய  சத்துணவு திட்டத்தில்,

நீங்கள் வடிவமைத்து கொடுத்த 

ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொரு வகை சாதம்.


மணக்க மணக்க 

கொண்டக்கடலை சாதமும், 

கீரை சாதமும்,

மிளகு முட்டைத் தொக்கும் 

சுவை நாவிலே நிற்கும்.


உங்கள் ரஞ்சிதமே நடன அசைவிற்கு 

இறக்கை கட்டி பறந்த எங்களைவிட்டு 

சிறகடித்து சென்று விட்டீர்கள்.

நூற்றியேழு திவ்யதேசம் கண்ட நீங்கள் 

நூற்றியெட்டாவது திவ்யதேசத்தில் 

இளைப்பாறுதல் பெறுங்கள்.


உங்கள் சமையலை 

எங்கள் கைகளால் 

தங்களுக்கு படைக்கவா....

இல்லை இல்லை...

தங்கள் கைகளால் 

பெருமாளுக்கு படைக்க...


உங்கள் பூதவுடல் 

உலகை விட்டுச் சென்று

உறங்கி இருக்கலாம்.

ஆனால் 

ஒவ்வொரு சமையல் கட்டிலும் 

ஒவ்வொரு குழிக் கரண்டியிலும் 

உங்கள் உயிர், பக்குவமாய் 

உள்ளத்தில் வாழும்.


(த ரஜிதா, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் ), அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி , படப்பை, காஞ்சிபுரம்)