இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

Manjula Devi
May 10, 2025,08:29 PM IST

சென்னை: பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை மாபெரும் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இதையொட்டி மாநில ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வரின் பேரணிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வந்தது. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வந்தது.


இந்த நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒற்றுமை பேரணி இன்று மாலை 5 மணிக்கு  நடைபெற்றது. சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெற்றது. இதில் முன்னாள் படைவீரர்கள்,  அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 




தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி முதல்வர் உள்ளிட்டோர் பேரணியில் அணிவகுத்து வந்தனர். பொதுமக்களும் ஏராளமானோரும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு மதத்தினர், பல்துறை பிரமுகர்களும் திரளாக இதில் பங்கேற்றனர். 


இந்திய ராணுவத்தை பாராட்டியும் வாழ்த்தியும், தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். 


ஆளுநர் ஆர். என். ரவி பாராட்டு


முதல்வர் தலைமையில் நடந்த இந்தப் பேரணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், 


பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.