மௌனமாக விழித்திருந்தது.. ஒரு கவிதை!

Su.tha Arivalagan
Dec 29, 2025,02:51 PM IST

- சி. குமரேஸ்வரி


இரவு

எதையும் கேட்கவில்லை,

அவளின் மௌனத்தை

சுமூகமாக ஏற்றுக்கொண்டது.

நாள் முழுதும் சேர்த்த

சொற்கள் சோர்ந்து,

மேசையின் ஓரத்தில்

அமைதியாக படுத்திருந்தன.

இன்று

கவிதை பிறக்கவில்லை,




ஆனால்

பிறக்க வேண்டிய உணர்வுகள்

உறங்காமல் இருந்தன.

ஜன்னல் வழியே வந்த காற்று

ஒரு வரி போல

சற்றுநேரம் நின்றது,

அதைப் பிடிக்க

அவளுக்கு விருப்பமில்லை.

நட்சத்திரங்கள்

அவளின் எண்ணங்களைப் போல,

சில அருகில்,

சில தூரத்தில்.

கடிகாரத்தின் முள்

அவளை விரட்டவில்லை,

இரவு

நேரத்தையே மறக்க வைத்தது.

இந்த இரவில்  

எழுதவில்லை 

ஆனால்

அவளுக்குள்

ஒரு கவிதை

மௌனமாக விழித்திருந்தது.


(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)