அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
பத்து நாட்களுக்கு முன் எனது நாத்தனார் போன் செய்திருந்தாள். அண்ணி நாங்கள் நாளைக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என கூறினாள். என்ன விசேஷம் என்று கேட்டேன். வந்து கூறுகிறோம் என்றார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஏறி வருகிறாள். வருவதற்கான காரணம் புரியாததால் சற்று குழம்பி இருந்தோம் .
மறுநாள் எனது நாத்தனாரும் அவர் கணவரும் வீட்டிற்கு வந்தார்கள். அரை மணி நேர சாதாரண உரையாடலுக்குப் பிறகு ,மெல்ல விஷயத்தை கூறினார்கள். எனது மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். வேறு ஜாதிப் பெண். எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. அதனால் நாங்கள் ஒரு கோயிலில் வைத்து எங்கள் இரு குடும்பம் மட்டும் திருமணத்தை முடிக்க முடிவு செய்துள்ளோம். அதை உங்களுக்குத் தெரியப்படுத்தவே வந்துள்ளோம் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கலாமே என்றோம். நாங்கள் முடிவு செய்த திருமணம் என்றால் நேரில் வந்து உங்களுக்கு தான் முதல் பத்திரிக்கை வைத்திருப்போம். இந்த நேரத்தில் இத் திருமணத்தை விமர்சையாக செய்ய மனமும் இல்லை. வசதியும் இல்லை. அதே சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நேரில் வந்து கூறுகிறோம் .திருமணம் முடித்த பிறகு நாங்களே அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து உங்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினாள்.
அதே சமயத்தில் நீங்கள் திருமணத்திற்கு வர வேண்டாம் என்றும் நீங்கள் வந்தால் மற்றவர்கள் இவர்களை மட்டும் கூப்பிட்டு உள்ளார்கள். நம்மை கூப்பிடவில்லை என்று நினைப்பார்கள் என்று வெளிப்படையாக பேசி விட்டார்கள்.
உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயத்தில் மனதில் எந்த வருத்தமும் இல்லை. இதற்காக இவ்வளவு தூரம் ரயிலேறி வந்து, மரியாதையுடன் நமக்கு தெரிவித்து உள்ளார்களே என்று ஒரு சந்தோஷம் இருந்தது.
அவர்கள் கூறிச் சென்ற படியே ஒரு வாரத்தில் கோயிலில் வைத்து திருமணத்தை முடித்து , போட்டோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டார்கள். திருமணம் முடிந்த சில நாட்களில் மணமக்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். விருந்தளித்து உபசரித்து ,புத்தாடை அளித்து , மகிழ்வோடு வழி அனுப்பி வைத்தோம். இதேபோல் பிற முக்கிய உறவுகளின் வீட்டிற்கும் அழைத்துச் செல்லப் போவதாக கூறினார்கள்.
இந்த முறையில் எந்த குறைபாடும் இருந்ததாக தெரியவில்லை .அதே சமயத்தில் செலவும் மிகக் குறைவு. யார் மனதும் நோகாமல் நல்லபடியாக அவர்களின் திருமணம் நடந்து அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெற்றாகிவிட்டது.
வசதி வாய்ப்பு குறைந்தவர்கள் இந்த புதுவிதமான, செலவு குறைந்த, சிறந்த முறையை பின்பற்றலாமே.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)