காலங்கள் மாறினாலும் நினைவுகள் மறைவதில்லை!
- அ.சுபாலட்சுமி
'நலம் நலம் அறிய ஆவல், உன் நலம் நலம் அறிய ஆவல்'.. என்னடா ஏதோ பாடல் வரிகள் இங்க எதுக்கு என்று யோசிக்கிறீங்களா? அட ஆமாங்க.
இன்று உலக தபால் தினம். இந்த காலத்தில் மக்கள் தங்கள் தகவல்களை பரிமார அதி நவீன வசதிகள் இருந்தாலும் மனிதனின் மனம் உறவுகளில் கசப்பை தான் காண்கிறது. நாம் இந்த அதி நவீன வசதியான வாட்ஸப் நம் மனதில் இருப்பதை உடனே நம் நெருங்கியவர்களுக்கு சொல்லி விட முடிகிறது என நினைக்கின்றோம். ஆனால் அதில் சுவாரசியம் இல்லை, பொறுமை இல்லை, அமைதி இல்லை.
நான் சிறுவயதில் தபால் பெட்டியில் தபாலை போட்டால் எப்படி வெகு தொலைவில் இருப்பவர்களுக்கு போகும் என்று யோசித்த காலங்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
எனக்கு ஓர் சிறிய கதை நினைவுக்கு வருகிறது,
கணவன் மனைவி இடையே ஏதோ மணஸ்தாபம் ஏற்பட்டதில் மனைவி தன் தாய் வீட்டிற்கு சென்றுவிடுகிறாள். மணஸ்தாபம் இருந்தாலும் பாசம் குறையவில்லை. மனைவி தன் கணவனுக்கு ஓர் தபால் எழுதுகிறாள்.
"என் அன்பே, எப்படி இருக்கீங்க? உடல் நலமா? என்னிடமும் தவறு இருப்பதை உணர்ந்தேன். என்னை மன்னித்து விடுங்கள். தங்களை காண மனம் ஏங்குகிறது. உங்களுடன் இருக்கும் போது இருந்த மகிழ்ச்சி இப்போ என்னிடம் இல்லை". அந்த தபால் கணவனிடம் சேரும் முன்பே கணவன் மனைவியிடம் சேர்ந்து விடுகிறான்.
புரியவில்லையா? இரு மனங்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தில் தன் தவறை உணர்ந்து பாசத்தினால் சேர்ந்து விட்டனர்.அந்த கால அவகாசத்தையும் அன்பையும் அந்த தபால் அவர்களுக்கு கொடுத்தது.
இப்போதைய அதிநவீன வசதி அந்த கால அவகாசத்தை தராததால் தான் பல உறவுகள் உடைகின்றன.
விழாக்களின் போது தன் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தன் உறவுகளுக்கு தெரிவிக்க வாழ்த்து அட்டைகளை தேடி கடைகளுக்கு ஓடினர்.
நமக்கு வரும் வாழ்த்து அட்டைக்காக காத்திருந்த மகிழ்ச்சியும் அடுத்த விழா வரை இருக்கும். இப்போதைய நவீன வசதிகள் அந்த மகிழ்ச்சியை தருவதில்லையே...
இன்றும் நம் நண்பர்கள் அனுப்பிய தபால்களை படித்தால் ஆகா என்ன ஓர் மன நிம்மதி.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)