ஒரு ஆசிரியராக பள்ளியில் காலடி எடுத்து வைத்தபோது!

Su.tha Arivalagan
Nov 01, 2026,03:13 PM IST

- அ.சுபாலட்சுமி


என் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஏழு வருடம் கழித்து ஓர் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு சென்றேன். அங்கே நான் சேர்ந்ததை நினைத்தால் நான் முதல் நாள் பள்ளி படிக்க அப்படி தான் சென்றிருப்பேன் என்று தோன்றுகிறது. ஏன்னு கேக்கறீங்களா..? சொல்லுறேன். 


நான் படித்ததோ ஆராய்ச்சி துறை. படித்தபிறகு பல இன்னல்களை சந்தித்தேன். பிறகு என் அப்பா செய்தித்தாளில் ஓர் பள்ளியில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து என்னிடம் கேட்டார். நான் விருப்பம் இல்லாமலும் வேறு வழி இல்லாமலும் என் தலையை மெதுவாக அசைத்தேன். அவ்வளவுதான், சிறு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது போல் என்னையும் என் அப்பா அவர்கள் சொன்ன தேதியில் அங்கே அழைத்து சென்றார். நேர்முகத் தேர்வு எல்லாம் முடிந்து, எனக்கு வேலையும் கிடைத்தது.




ஆனால், ஆசிரியர் தகுதிக்கான படிப்பு முடிக்காத காரணத்தால், பள்ளியில் என்னை அதை படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டனர். அடுத்த வருடமே நானும் பகுதி நேரப் படிப்பாக பி.எட்டில் சேர்ந்தேன். அதை முடித்து பிறகுஎம்.எட் படித்தேன். இதற்கிடையே, என்னை மூன்றாம் வகுப்பின் வகுப்பு ஆசிரியராக நியமனம் செய்தனர். 


நானும் முதல் நாள் பயத்துடன் தான் சென்றேன்.  சில நாட்களில் மாணவர்கள் என்னிடம் நன்றாக பேசப் பழகத் தொடங்கி விட்டனர். அங்கே நான் அனைத்து பாடங்களும் அந்த வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் தான் சொல்லித்தருவேன். மதிய உணவும் அவர்களுடன் தான். இதில் ஓர் வருடம் கொரோனா காலம். அந்தநேரத்தில் கைபேசியை உபயோகித்து பாடங்கள் எடுத்தேன். எனது ஆன்லைன் போதனை சிறப்பாக இருந்ததால், பல பெற்றோர்களின் பாராட்டுகளையும் பெற்றேன்.




குழந்தைகளும் அவர்கள் கொண்டு வரும் உணவுகளை என்னிடம் பாசத்துடன் தருவார்கள். சிறந்த ஆசிரியர் விருது என்பது நாம் நம்மை பற்றி பிறரிடம் பகிர்ந்து கேட்டு பெறுவதில்லை. நாம் மாணவர்களிடம் நடந்து கொள்வதை பார்த்து தானாக பொற்றோரிடமும் மாணவர்களிடமும் இருந்து கிடைப்பது, அப்படி பார்த்தால் நான் அந்த சிறந்த ஆசிரியர் விருதை ஏற்கனவே பெற்றுவிட்டேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


நான்கு வருடங்கள் அங்கே அதே மூன்றாம் வகுப்பில் வகுப்பு ஆசிரியராக பணியாற்றினேன். பணியில் இருந்தாலும் பல பாடங்களையும் கற்றுக்கொண்டேன். அங்கே என் சித்தப்பாதான் துணை முதல்வராக பணியாற்றினார். அது எனது சுதந்திரத்தை தடுத்தது, காரணம் நான் என் வேலையை சரிவர செய்தாலும் உடன் இருந்தவர்கள் 'உனக்கு என்னப்பா, உன் சித்தப்பா இருக்கிறார். விடுப்பில் இருந்து எல்லாமே எளிதில் கிடைத்து விடும்' என்று கூறுவார்கள். இது எனது மனதை பாதித்தது.


இதனால் நான் என் தனித்துவத்தையும் திறமையை வெளிப்படுத்த அங்கிருந்து வெளியேறினேன். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா...?


(தொடரும்)


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)