பைசன்.. என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லியுள்ளார் மாரி செல்வராஜ்.. ஒரு ஆசிரியையின் பாராட்டு!
- அ. வென்சி ராஜ்
பைசன் பட விமர்சனம்.. என்னங்க படம் வந்து இத்தனை நாளாச்சே.. இப்ப விமர்சனமா என்ற உங்க கேள்வி புரியுது.. உண்மைதான், ஆனால் உணர்வுகளை எப்போதுமே பதிவு செய்யலாம். அந்த வகையில் ஒரு ஆசிரியை தான் பைசன் படம் பார்த்து உணர்ந்தவற்றை அழகாக விவரித்துள்ளார்.
மிக அருமையான ஒரு படம். நான் ஒரு ஆசிரியை. இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமோ என்ன சொல்ல வேண்டுமோ அதை மிக அழகாக சொல்லி இருக்கின்றார். ஒரு இலக்கு வேண்டும். ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி அந்த இலக்கை நோக்கி எந்தத் தடை வந்தாலும் தகர்த்தெறிந்து சென்று கொண்டே இரு என்ற செய்தியை மிக அழகாக தத்ரூபமாக சொல்லி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய நடிகர்கள் அத்தனை பேரும் தங்களுடைய பணியை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தகுந்த நடிகர்களை தேர்வு செய்ததில் இயக்குனருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து அச்சமூகத்திற்கு உள்ளேயே இருக்கக்கூடிய போட்டி பொறாமைகள் அத்தனையும் புறந்தள்ளி ஒரு ஆசிரியரின் உதவியால் ஒரு மாணவன் கபடியில் தனக்குள்ள தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, வெளியில் இருந்து வரக்கூடிய தடைகளைத் தகர்த்தெறிந்து ஜப்பானில் நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி இந்திய அணியை தனது திறமையால் வெற்றி பெறச் செய்து சாதனை செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
நம் தமிழ் திரை உலகில் கைவிட்டு எண்ணக்கூடிய திரைப்படங்கள் மட்டுமே ஆசிரியர்களுக்கு மரியாதை தரக்கூடியதாகவும், மாண்பினை எடுத்துக்காட்டுவதாகவும் வருகின்றன. அதில் இத்திரைப்படம் ஆசிரியரை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கின்றது.
பெற்றோரால் கூட அடையாளம் காண முடியாத குழந்தைகளின் தனித்திறமைகளை ஒரு ஆசிரியர் மட்டுமே கண்டறிந்து உலகறிய செய்கிறார் என்பதை இப்படம் மிக அருமையாக எடுத்து கூறி இருக்கிறது. மனம் நிறைந்த நன்றிகள் மாரி செல்வராஜ் சார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் என்றாலே ஜாதி பற்றிய படங்கள்தான் எடுப்பார் என பேசுபவர்கள் மத்தியில், அவர் ஒவ்வொரு முறையும் இது ஜாதி பற்றி பேசும் படம் அல்ல... ஜாதியை தகர்த்தெறிய எடுக்கப்பட்ட படம் என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்.... 2018 இல் இருந்து 2025 வரை 5 படங்கள் இயக்கியிருக்கும் இவரின் ஒவ்வொரு படமும் ஆணிவேர் போன்று ஒரு கருத்தை ஆழ பதித்துக் கொண்டே இருக்கிறது.
ஜாதிகள் இல்லையடி பாப்பா.. ஆம். .. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்னும் பாரதியாரின் வரிகளை இரு விதமாக எடுத்துக் கூறலாம். ஜாதியே இல்லை அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை மகிழ்வாக படம் எடுத்து கூறலாம்... இரண்டாவதாக ஜாதி வெறியால் பாதிக்கப்படும் மக்களின் வேதனைகளைக் காட்டி ஜாதி வேண்டாமே எனக் கூறலாம்.. இதில் மாரி செல்வராஜ் அவர்கள் இரண்டாவது முறையைப் பின்பற்றுகிறார். மொத்தத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் கூற வருவது ஜாதிகள் இல்லையடி பாப்பா என்னும் முறுக்கு மீசைக்காரனின் வைர வரிகளைத் தான்.
தாரணமாக போதைப் பொருள் வேண்டாம் என்பதை இளைய தலைமுறைக்கு கூற விரும்பும் ஒருவர், ஒன்று போதைப் பொருள் பயன்படுத்தாமல் வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ்கின்ற இளைஞர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டி போதைப் பொருள் வேண்டாம் எனக் கூறலாம். இல்லையென்றால் போதைப் பொருளை பயன்படுத்தி சீரழிந்த ஒருவனின் வாழ்க்கை வரலாறையும் அவன் பட்ட பாடுகளையும் பாதிப்புகளையும் படம் பிடித்து காட்டி இது உனக்கு வேண்டாமே எனக் கூறலாம். இந்த இரண்டு வகைகளில் என்னை பொருத்தவரை அதில் உள்ள பேராபத்துகளை காட்டும் பொழுது மட்டுமே, குறைகளை காட்டும் பொழுது மட்டுமே இளைஞர் கூட்டம் அந்த போதைப் பொருளின் பக்கம் திரும்புவதை நிறுத்த முடியும். இளைஞர்களை நம்மால் நல்வழியில் திசை திருப்ப முடியும். இதைத்தான் மாரி செல்வராஜ் அவர்களும் செய்கிறார்.
சென்னை கண்ணகி நகரில் இருந்து 3415 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ரைனில் சென்று இன்று கார்த்திகா பெற்று வந்துள்ள வெற்றி, இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் படத்திற்கு மணிமகுடமாக அமைந்துள்ளது எனலாம்.
கவர்ச்சி இன்றி திரைப்படம் எடுக்கும் துணிவிருக்கும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய திரைப்படங்களில் நான் ஒரு நலம் விரும்பியாக கூற விரும்புவது கவர்ச்சியை முற்றிலுமாக தவிர்த்திருக்கும் மாரி செல்வராஜ் அவர்கள் வன்முறையை சற்று குறைத்துக் காட்டினால் நலமாக இருக்கும். வன்முறையை யதார்த்த வாழ்வியலில் பொருந்தாதவற்றை விடுத்து மனதின் வன்மத்தையெல்லாம் வன்முறையாக மாற்றாமல் சற்று வீரியம் குறைத்துக் காட்டினால் வளரும் தலைமுறையினருக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாக இவரது படங்கள் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஒரு நல்ல ஆசிரியரிடம் கல்வி கற்ற மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)