சிந்தனைச் சிதறல்.. கவலைப்படுதலும் ஒரு கலைதான்!
- அ. தாமஸ்
கவலைப்படுதலும் ஒரு கலைதான்; அதை நாம் சரியாகக் கையாளும் பொழுது. நாம் கவலைப்படுகிறோம் என்பது குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து நாம் கவலைப்படலாம். மாறாக நாம் கவலைப்படுகிறோம் என்பதை அறியாமலும், நமக்கும் வலிக்கும் என்பதை உணராமலும் இருப்பவர்களை நினைத்துக் கவலைப்படுவதை விடுத்து அவற்றைக் கடந்துபோவது குறித்துக் கருத்தாய் இருங்கள்.
நாம் சில நேரங்களில் கவலைப்படுவதற்குக் கூட காரணம் தேடிக் கொண்டிருக்கிறோம். நம்மோடு உடன் பயணித்தவர்கள் ஏதோ ஒரு நிலையில் நம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்றால், அது குறித்து கவலைப்பட வேண்டாம். மாறாக அத்தகைய புறக்கணிப்புகளையே நமது அடுத்த நிலை வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டுங்கள்.
ஒருவருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் கற்பிப்பார்கள். அவர்கள் கூறும் காரணங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டாம்; மாற்றிக்கொள்வதால் நிச்சயமாக அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
நம்மை விரும்புபவர்களுக்கு நமது செயல்களும் விரும்பத்தக்கதாகவே இருக்கும்; நம்மை விரும்பாதவர்களுக்கு நாம் எத்தகைய மாற்றத்தைச் செய்தாலும் அவை விரும்பத்தகாததாகவே இருக்கும். எனவே, இத்தகையவர்கள் குறித்து கவலைப்பட்டு பயத்தால் சுயத்தை இழக்காமல் நாம் நாமாகவே இருப்போம்.
இனிவரும் காலங்களிலாவது, "நாம் நேசிக்கும் அனைவரும் நமக்கானவர்கள் அல்ல; மாறாக, நம்மை நேசிப்பவர்களே நமக்கானவர்கள்" என்பதை உணர்ந்து, அவர்களின் உறவினில் நிலைத்து, அது தரும் மகிழ்வினில் திளைத்திடுவோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)