சிந்தனைச் சிதறல்.. கொடுப்பதில் நிறைவு காணுங்கள்!
Nov 16, 2026,03:22 PM IST
- அ.தாமஸ்
கொடுப்பதில் நிறைவு காணுங்கள். கொடுத்தல் என்றவுடன் மரங்களை நினைவுகூருகிறோம். எந்த ஒன்றையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் மரங்கள் அனைத்தையுமே கொடுத்துவிடுவதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அவை எதையும் வலியுறுத்திக் கொடுப்பதில்லை; மாறாக, நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வதற்கு நிபந்தனையற்ற அனுமதியளிப்பதாகவே நினைக்கிறோம்.
மரங்களிடமிருந்து நாம்தான் நமக்குத் தேவையான அனைத்தையுமே, தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்கிறோம். அவ்வாறு எடுப்பதால் எந்த ஒன்றும் வீணாவதில்லை; மாறாக, நாம் எடுத்ததுபோக மீதமானதை வேறொருவர் எடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறார். எனவே, இனிவரும் காலங்களில் நாம் கொடுப்பதில் நிறைவு காண்பதோடு, பலரும் அவரவருக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வதற்கு நிபந்தனையற்ற அனுமதி கொடுக்க உறுதியேற்போம்.
இங்கு நிபந்தனையற்றுக் கொடுக்கும் மரத்தின் பெருமையைப் பல நிலைகளில் பேசும் நாம், அந்த மரங்களுக்கு ஆதாரமாக இருக்கும் மழையையும், மண்ணையும், இதர காரணிகளையும் மறந்தே போகிறோம். எந்த ஒன்றையும் மரம் தனித்துக் கொடுப்பதில்லை; பலவற்றின் கொடையைப் பெற்றே கொடுக்கும் மனதோடு எடுக்கவும் அனுமதிக்கிறது.
மனிதர்களாகிய நாமும் அப்படித்தான்! எந்த ஒன்றையும் கொண்டு வரவில்லை; யாரோ ஒருவர் நமக்குக் கொடுத்ததைத்தான் பிறருக்குக் கொடுக்கிறோம். எனவே, இனிவரும் காலங்களில் கொடுக்கும் நிலை கடந்து, விரும்பியவர் விரும்பியதை எடுக்க அனுமதிக்க விருப்பம் கொள்வோம்.
நிச்சயமாக, மரங்களை அழித்துவிட்டால், அவை உயிரோடு இருக்கும் பொழுது நமக்கு வழங்கும் நன்மைகளைத் தொடர்ந்து பெற முடியாது. அதுபோல, நாமும் எவரிடம் அன்பையோ, அறிவையோ, பொன்னையோ, பொருளையோ பெறுகிறோமோ, அவர்களை அடியோடு சாய்த்து நம் தேவையை நிறைவு செய்யும் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றி, அவர்களை வாழ்வித்து அவர்களால் நாமும் வாழும் நிலை ஏற்போம். உதவி பெறுவோம்; நாமும் உதவுவோம்; உதவியவர்களின் தன்னலமற்ற உதவியை எந்நிலையிலும் மறவாமல்!
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)