வியர்வை

Su.tha Arivalagan
May 16, 2026,03:33 PM IST

- அ. தாமஸ்


வேர்நீர் கொழுநீர் வியர்ப்பு வேர்வை என பலநிலை ஏற்றும் உதிரத்தின் மறுவடிவையே உணர்த்தி நிற்கிறாய்! 


வேர்நீர் உதிர்க்கா மானுடமும்;

வண்ண மை உதிர்க்கா எழுதுகோலும் மகத்துவம் பெற்றதாக வரலாறு இல்லை!


வியர்வையை விதைத்தவனே வெற்றியை அறுவடை செய்கிறான்! 


உப்புக்கரிக்கும் வியர்வைத் துளிகள் தான் உன்னை உலகறியச் செய்யும் உயர்வைத் தருகிறது!


பல நேரங்களில் உதிரம் கூட மதிப்புப் பெறுகிறது-ஆனால்

வியர்வையோ தன் மதிப்பைத் தினம் தேடியே அழைகிறது!


இவ்வுலகு உன் வியர்வை மதிப்பை அறிந்திருந்தால் என்றோ உலகம் வியக்க உயர்ந்திருப்பாய்!




உன் உயர்வு ரசிக்கும் ஓராயிரம் உறவுகளை விட உன் வியர்வை ரசிக்கும் ஓர் உறவே உயர்வானது;

அத்தகு உறவு உனதானால் நாளைய உலகு உனதாகும்! 


மண்ணை முத்தமிடா வியர்வைத் துளியே வெற்றி உன்னை முத்தமிடும் வழி கெடுக்கிறது! 


வியர்வையில் விளையும் வெற்றி மட்டுமே உன்னை நிரந்தர இடத்தில் நிமிர்த்தி பிடிக்கிறது! 


பிற வழியில் விளைந்திடும் வெற்றியோ இன்று ருசிக்கும் நாளை கசக்கும் ரசித்த உலகோ நாளையே உன்னை நசுக்க வழி கொடுக்கும்!


உழைப்பின் அடையாளமும் உடலின் உயர் மொழியுமே வியர்வை! 


வியர்வையின் வாசம் நுகராமல் வாழ்வின் உயர்வை அடைந்திடும் வழி ஏது! 


உழைப்பின் உச்சத்திலேயே உன் உதிரம் கொதித்து  வியர்வையாய் வெளிப்படுகிறது! 


மலர் தோட்டத்தை அலங்கரிக்கும் மல்லிகை போல உன் உழைப்பில் உதிரும் வியர்வைத் துளிகளே உப்பள மலராய் உன்னை அலங்கரிக்கிறது!


உதிரும் வியர்வையை அவலமென நினைத்தால்; அது கொடுக்கும் வெற்றியை எந்நிலையில் அளப்பாய்!


உழைப்பை ரசிக்காமல் அது உதிர்க்கும் வியர்வையை ஏற்காமல் அதில் விளையும் வெற்றியை ருசிப்பது அபத்தம் இல்லையா? 


உழைப்பே உயர்வு அதில் உதிரும் வியர்வையே நிறைவு-எனவே

வியர்வை ரசிப்போம் அது தரும் உயர்வை ருசிப்போம்!


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)