சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.
- அ.தாமஸ்
"முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது." ஆம், நம் வளர்ச்சி ஒன்றையே தன் உயர் மகிழ்ச்சியாய்க் கருதி அதிலே நிறைவு காணும் தன்னலமற்ற தியாகிகள், அவர்களின் விடுபட்ட எண்ணங்களை நம்மில் நிறைவேற்ற முனைபவர்கள்; அதை முறையாய் நிறைவேற்றும் வழி தேடுபவர்கள். எனவே அவர்களின் கருத்துரைகளை ஏற்று அதுவே நம் வளர்ச்சியின் முகப்புரை என்பதை அவர்களும் அறிய உணர்த்துவோம், அவர்களின் மகிழ்வையும் தினம் உயர்த்துவோம்.
நம் முன்னோர்கள், கேட்பதையெல்லாம் கொடுத்து நம் உழைப்பை சிதைப்பவர்கள் அல்ல, மாறாக தேடிப் பெறும் வாய்ப்பையும், தேடிப் பெறுவதால் கிடைக்கும் பேரின்பத்தையும் உணர்த்துபவர்கள். எனவே தொய்வின்றித் தேடுங்கள், தேடலால் மட்டுமே உங்களின் இலக்கை அடையுங்கள்.
நம் முன்னோர்கள் உடல் உழைப்பால் உயர்ந்தவர்கள், பண மதிப்பால் நிறைந்தவர்கள்; இன்று இவை அனைத்தையும் கடந்து, இறையச்சமே உச்சம் என்பதை உணர்ந்தவர்கள். எனவே இறையச்சம் உணர்வோம், உயர் உச்சம் அடைவோம்.
முதுமை என்பது புதிதாய் உதிப்பதல்ல; பலநாள் வளர்ச்சியின் முதிர்ச்சியே முதுமை. எனவே அவர்கள் பயனற்றவர்கள் என்பதை மறந்து, அவர்களால் நாம் பயன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து தினம் அவர்களின் வார்த்தைகளை மதிப்போம், அவர்தம் அனுபவத்தோடு நம்மையும் இணைப்போம், என்றும் அழியாத புகழோடு நிலைப்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)