சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?

Su.tha Arivalagan
Apr 18, 2026,10:11 AM IST

- அ. தாமஸ் 


தவறுகளை தவறு என்று உலகிற்கு அடையாளப்படுத்த முனைப்புக் காட்டும் நாம் அத்தவறுகளே நிகழாமல் இருக்க முயல்வது தான் நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமையும்.


ஒரு தவறை தவறு என்று அடையாளப்படுத்துவதற்கு முன் அதை அடையாளப்படுத்தும் தகுதி நமக்கு இருக்கிறதா என்று ஒருகணம் யோசித்தால் தான் தவறைக் கூட தன்மையாய் வெளிப்படுத்துவோம். 


பிறரிடம் மதிப்பை எதிர்பார்க்கும் நாம் அதை அவர்களுக்கு மட்டும் ஏனோ கொடுக்க மறந்து விடுகிறோம். விதைத்தால் தானே அறுக்க முடியும். 


தன் மதிப்பு என்பது தான் வகிக்கும் பதவியைப் பொறுத்தது அல்ல.மாறாக நாம் பிறரிடம் எத்தகைய பண்புகளை விதைக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.


தன் மதிப்பை அறியாதவர்களே சிரித்தால் கூட தன் மதிப்பு சிதைந்து விடும் என்று  கருதி போலியான கோபத்தால் தன்னை அடையாளப்படுத்தி உதவி வேண்டும் போது கூட உறவற்று நிற்கிறார்கள்.




அரவணைப்பது அரசன் என்பதாலேயே குதிரை கூட அரியணை  கேட்கிறது. எனவே தகுதியானதை தகுதியான இடத்தில் வைப்போம். அழகாய் இருக்கிறது என்பதற்காக காலணிகளை கழுத்தில் அணிய முடியாது தானே.


மதிப்பு என்பது வெளியில் இருந்து கிடைப்பதல்ல நிச்சயமாக நம்மில் இருந்து உதிப்பது. ஒவ்வொரு பொருளும் அதனதன் இடத்தை சேரும்பொழுதே தன் மதிப்பைப் பெறுகிறது. எனவே நம்மை மதிக்காதவர்கள் எல்லாம் நம் மதிப்பு தெரியாதவர்கள் அல்ல பிறரை மதிக்கவே தெரியாதவர்கள். எனவே நம்மை மதிக்காதவர்களையும் மதிப்போம் மதிப்பின் அவசியம் விதைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)