மாபெரும் வலி வேறொன்றும் இல்லை!
- அ. தாமஸ்
காணத் தவித்திடும் உறவைக் காணும் வாய்ப்பின்றித் தவித்த காலம் கடந்து, காணும் வாய்ப்புக் கிடைத்திடும் வேளையிலே, சிரிக்க வேண்டும் என நாம் நினைக்கையில், சிரிக்கக்கூட இயலாத சூழல் வந்தால், உள்ளத்தில் துளிர்க்கும் கண்ணீரைக்கூட வெளிப்படுத்த இயலாத அந்த நிலையைவிட மனதிற்கு மாபெரும் வலி வேறொன்றும் இல்லை!
காணத் தவித்த உறவொன்றைக் காணும் அந்த வேளையிலே, காத்திருந்த ஏக்கத்தையே மறைத்து, கண்டும் காணாததுபோல் கடந்துசெல்ல நினைக்கும் மனவலியை என்னென்று சொல்வது?
முன்னின்று பார்த்து அழைக்க மனம் துடித்திடினும், நம் சந்திப்பைக் காணும் உலகம் புறம்பேசும் என எண்ணி ஒதுங்கிச் செல்வதும், உயிரையே சுண்டியிழுக்கும் பெருவலியே!
சிரிக்க வேண்டிய வாய்ப்பைக்கூட மறுக்கும் சூழலும், அழுகையை வெளிப்படுத்த இயலா அவலநிலையும், கலங்காத மனதையும் கலங்கச் செய்யும்; கரையாத உறவையும் கரைத்துவிடும்!
உணர்ச்சிகளை உள்ளுக்குள்ளேயே புதைத்து, மனம் வெதும்பிக் கரையும் இதயம், கண்ணீரால் கண்களை நிரப்பி, அவற்றில் பெருகும் கண்ணீரையும் உலகறியாதபடி துடைத்துவிட்டு, உயரிய அன்போடும் உலகம் உணராத ஆழ்ந்த உணர்வோடும் தவித்துக்கொண்டே இருக்கிறது!
இத்தகு சிரமங்கள் நாம் களைய துணிச்சலைத் துணையாய்க்கொண்டு துவண்டு நாம் போகாமல் எழுந்து நாம் நடந்திடுவோம்!
நம் எண்ணமதில் நிலைத்து அதன் நிலையில் வாழ்ந்திடுவோம்!
நாளைய விடியல் நமக்கானதாய் அமையும் என்ற நம்பிக்கையில் மகிழ்ந்திடுவோம்!
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)