சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!

Su.tha Arivalagan
Aug 03, 2026,05:15 PM IST

- அ. தாமஸ்


தன் ஆண்மையின் ஆற்றலை பெண்மைக்குள் விதைத்து, பெற்றிடும் மகவை பெரும்பேராய் நினைத்து, தினம் அதன் மகிழ்வையே தன் மகிழ்வென வாழ்ந்திடுவார். தன் உதிரத்தால் உதித்ததாலோ, சிறு துளி வியர்வைக்கும் கூட அதிர்ந்து, கண்ணினும் மேலாய் காத்திடுவார். 


உழைக்க விரும்பாது ஊர் சுற்றித் திரிந்தவர், உற்றவளுக்கும் பெற்றவருக்குமாய் ஓடி ஓடி உழைத்திடுவார்; உள்ளதை அனைத்தையும் கொடுத்திடுவார்;  அவர்களின் மகிழ்வினிலே தன் மகிழ்வினைத் தொலைத்திடுவார். 


மகவின் கனவே மகத்தானதென,  தன் கனவையும் கை காசையும் தொலைத்தாலும், அவர்களின் வளர்ச்சியிலும் வெற்றியிலுமே பேரானந்தம் அடைந்திடுவார்; உடல் உள்ள வலிகளையும் உள்ளுக்குள் மறைத்திடுவார்; பிறர் அறிய, புன்னகை ஒன்றையே விதைத்திடுவார். 




கண்டதற்கெல்லாம் உணர்ச்சி கண்டவர், இன்று தன் உறவுகளுக்காக உணர்ச்சியற்று, உயிரற்ற மரம் என நடித்திடுவார். பிடித்ததை எல்லாம் உண்டு களித்தவர், பிடிக்கவில்லை என பாசாங்கு செய்து, பிள்ளைக்குப் பிடித்ததை எல்லாம் கொடுத்திடுவார்; தன் ஆசை அனைத்தையும் மீசைக்குள்ளே  மறைத்திடுவார்.


இத்தகு உறவே உலகில் உயர்வென நினைத்தே, ஒவ்வொரு நிலையிலும் காத்திடுவோம்.அவர்களின் மகிழ்வே நம் மகிழ்வென வாழ்ந்திடுவோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)