சிந்தனைச் சிதறல்.. கிடைப்பதைப் புசிப்போம்; பசியினை முற்றாய் மறப்போம்!

Su.tha Arivalagan
Aug 31, 2026,04:29 PM IST

- அ.தாமஸ்


கிடைத்த வேலையைச் செய்ய மறுக்கும் நாம், நினைத்த உணவை உண்ண நினைக்கிறோம். உழைக்க மறுக்கும் நாம், உண்ண மட்டும் நினைப்பது அபத்தம் இல்லையா? 


பசியின் கோர முகத்திற்குக்  கிடைத்ததை உண்ணாமல்,  நினைத்ததை மட்டுமே உண்பேன் என்பதில் நாம் காட்டும் பிடிவாதமே ஆணிவேர். எனவே, கிடைப்பதைப் புசிப்போம்; பசியினை முற்றாய் மறப்போம்.


உணவுத் தேவையையும், உறவுத் தேவையையும் உணர்வின் நீட்சியே நிறைவு செய்கிறது. எனவே,  உணர்வின் உச்சத்தை உணர்ந்து உணர்த்துபவர்களோடு உறவைப் பகிர்ந்தால், நம் உறவுத் தேவையும் உணர்வுத் தேவையும் 'போதும்' என்ற நிலையில் தம் நிறைவை உணர்த்தும்.




நாம் குடிக்கும் பானத்திலும் உண்ணும் உணவிலும் வண்ணம் பார்த்து ஒதுக்க வேண்டியதை, சிலர் மட்டும் வர்ணம் பார்த்து ஒதுக்கிவிட்டு, பசி வாட்டும் வேளையிலும் கூட வர்ணத்தால் ஒதுக்கியதைப் பறைசாற்றுவதிலேயே பெருமை கொள்கிறார்கள். இந்நிலை மாறாதவரை சிலரின் பசி தீரப்போவதே இல்லை.


பதார்த்தங்கள் பல படைத்தாலும், நம் வயிற்றின் அளவைத் தாண்டி உண்ண முடியாது என்ற எதார்த்தத்தை உணர்வோம். தேவைக்கு மிகுதியானதை, தேவையில் இருப்பவர்களைத் தேடி தினமும் உதவுவோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)